Published : 29 Oct 2020 09:01 PM
Last Updated : 29 Oct 2020 09:01 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்: ராமதாஸ் 

7.5% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க போதிய சட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த அரசாணை மாணவர்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தைப் போக்க வேண்டுமே தவிர, மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவிடக் கூடாது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி பயிலும் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி கொண்டு வரப்பட்டு, அதே நாளில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால தாமதம் செய்த நிலையில், ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தொடக்கம் முதலே பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், சட்டம் இயற்றப்பட்டு 45 நாட்களாகியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசு இப்போது தன்னிச்சையாக அரசாணை பிறப்பித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; ஆனால், ஆளுநர் தேவையின்றிக் காலதாமதம் செய்து வருவதால் நடப்பாண்டில் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போய்விடக்கூடும்; இத்தகைய சுழலில் மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இவ்வாறு செய்திருப்பதாக அறிய முடிகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொள்கை முடிவு எடுத்து இந்த அரசாணையைப் பிறப்பித்திருப்பதாக அரசு விளக்கமளித்துள்ளது. சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், இப்படி ஓர் அரசாணையை பிறப்பித்திருப்பது நீதிமன்றத்தின் ஆய்வில் தாக்குப்பிடிக்குமா? என்பது தெரியவில்லை.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்குக் கடைசி நாள் இன்று வரை நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு வேளை கடைசி நாள் நிர்ணயிக்கப்பட்டாலும் கூட, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று, நிலைமையை விளக்கிக் கூறி கூடுதல் அவகாசத்தைப் பெற முடியும். அதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே, ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று 7.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதுதான் சரியாக இருக்கும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டால், அதை, தலைசிறந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களை நியமித்து வலிமையாக எதிர்கொண்டு 7.5% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க போதிய சட்டப்பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

7.5% இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் தமிழக ஆளுநர்தான். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு 45 நாட்களுக்கு மேலாகியும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு ஆளுந்ர் தரப்பில் கூறப்படும் காரணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இல்லை. இனியும் இந்தச் சிக்கலைத் தீவிரப்படுத்தாமல் இட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் அரசின் முடிவுகள், தீர்மானங்கள், சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரையறை நிர்ணயிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x