Published : 29 Oct 2020 07:35 PM
Last Updated : 29 Oct 2020 07:35 PM

வேலூர் அருகே திருவலம் பேரூராட்சியில் கணக்கில் வராத பணம் ரூ.52 ஆயிரம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் நடவடிக்கை

வேலூர் அருகே திருவலம் பேரூராட்சியில் கரோனா ஊரடங்கு காலத்தில் போலி பில்கள் மூலம் பினாயில், சுண்ணாம்பு, முகக்கவசம் வாங்கிய நிலையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் திருவலம் பேரூராட்சியில் கரோனா ஊரடங்கு காலத்தில் போலி பில்கள் மூலம் அரசு நிதியில் முறைகேடு செய்வதாக, வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வரப்பெற்றன. அதேபோல் சுண்ணாம்பு, முகக்கசவம், பினாயில் வாங்குவதில் போலி பில்களைப் பயன்படுத்துவதும், தெரு விளக்குகள் பொருத்துவதில் கையூட்டுப் பெற்றுள்ளதாகவும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றன. இந்த முறைகேட்டில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் துரை ஆகியோர் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் காவல் ஆய்வாளர்கள் விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (அக்.29) பிற்பகல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரூராட்சிகளுக்கான பொருட்களை, பில் எதுவும் இல்லாமல் பணத்தைக் கொடுத்து வாங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் அரசு அலுவலர்கள் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்று வருகின்றனர். ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்திலேயே கையூட்டு முறைகேடு புகார்கள் தொடர்பாகத் திருவலம் பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x