Last Updated : 29 Oct, 2020 06:10 PM

 

Published : 29 Oct 2020 06:10 PM
Last Updated : 29 Oct 2020 06:10 PM

கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு சட்டத்தை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தக்கோரிய வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சமீபத்தில் சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். நீதிபதிகள் பலர் இடஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருப்பதாக தரமற்ற வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது.

இது தொடர்பாக அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போல கருத்து தெரிவிப்பவர்களுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது. கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி தேச நலனிற்கு எதிராக செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப்பள்ளி மாணவர்கள் வேலை செய்து கொண்டே கல்வி பெறுவதாக நீதிபதி கலையரசன் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் அரசுப் பள்ளி மாணவர்களை தரக்குறைவாக விமர்சிப்பவர்கள் உண்மையை தெரிந்து கொள்வார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ஒதுக்கீடு மசோதா மீது ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும். இந்த ஆண்டாவது மருத்துவக் கல்லூரிகளில் 300 முதல் 400 அரசுப்பள்ளி மாணவர்கள் சேர வேண்டும் என நீதிமன்றம் நினைக்கிறது என்றனர்.

பின்னர், அரசு தலைமை வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதால் விசாரணையை நவ., 2-க்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x