

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 26 வயது இளம்பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 8 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
சிதம்பரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு உயர் ரக பரிசோதனைக் கருவிகள் இல்லாததால் மேல் பரிசோதனைக்காக சிதம்பரம் அண்ணாமலை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் கர்ப்பப்பைக்கு அருகில் உள்ள வலது சினைப்பையில் பெரிய நீர்க்கட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மயக்க மருத்து (Anaesthetists) ஒப்புதல் தர மறுத்ததால், அவர் கடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவமனை உள்ளதால் அங்கே சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் என ஜிப்மர் மருத்துவர்கள் கூறி அவரை அங்கு அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
என்ன செய்வது என்று திகைத்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவரை மீண்டும் கடந்த 25-ம் தேதி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனைத்து மருத்துவ அறிக்கைகளுடன் அழைத்துச் சென்றனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் அந்தப் பெண்ணின் அனைத்து மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளைப் பார்த்து அவரை அந்த மருத்துவமனையில் சேர்க்க அனுமதித்தார். அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அப்பெண் வலியில் துடித்ததாலும், சினைப்பை கட்டி உடையும் நிலையில் இருந்ததாலும், மயக்க மருந்து மருத்துவர் மற்றும் விடுப்பிலிருக்கும் சக மருத்துவர்களிடமும் கலந்தாலோசித்து அன்று இரவே 9 மணிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும், பணி மருத்துவர் செய்த பரிசோதனைகளில் 36 வாரங்கள் கடந்த சிசு இருக்கும் அளவில் வயிற்றில் உள்ள கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. கட்டியின் நீள அகலம் 30 செ.மீ x 30 செ.மீ. அதனுள் 8 லிட்டர் சினைப்பை சுரபி நீர் இருப்பதும் மீயொலி நோட்டம் (USG Scan) மூலம் தெரிந்தது.
இந்தப் பரிசோதனைகளால் அப்பெண்ணுக்கு உள்ளது வலது சினைப்பை கட்டி என்று உறுதி செய்யப்பட்டு, அவருக்குக் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் மருத்துவர் குழு தீர்மானித்து அறுவை சிகிச்சையைத் தொடங்கினர்.
கட்டி பெரிதாக இருந்ததால், கட்டியில் துளையிட்டு 1 லிட்டர் நீர் சிறிய பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டு கட்டி அகற்றப்பட்டது. பல மாதங்களாக அவதியுற்றுவந்த இந்த அறுவை சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ளார். அவர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த அறுவை சிகிச்சையை மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் நீதிமாணிக்கம், மூத்த மகப்பேறு மற்றும் பெண் பிணியியல் மருத்துவர் நந்தினி, அன்றைய பணி மகப்பேறு மருத்துவர் ராகுல் ஆனந்த், அறுவை அரங்க செவிலியர் மகாலட்சுமி, அறுவை அரங்க உதவியாளர்கள் சௌந்தர்ராஜன் மற்றும் ஷாநவாஸ் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர்கள் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.