Published : 29 Oct 2020 04:27 PM
Last Updated : 29 Oct 2020 04:27 PM

அரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தமிழகத்தில் நவ.6 முதல் பாஜக தலைவர் முருகன் நடத்தும் வேல் யாத்திரையால் கலவரமே விளையும். கரோனா காலத்தில் தமிழகம் முழுவதும் இதுபோன்று ஊர்வலம் செல்வது நோய்த்தொற்றைப் பரவச் செய்யும் என்பதால் அதற்குத் தடை விதிக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“தமிழகத்தில் 'வேல் யாத்திரை' என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்குத் திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே 'வேல் யாத்திரை' எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.

பாஜக நாடு முழுவதும் நடத்தியிருக்கும் யாத்திரைகளைத் தொடர்ச்சியாகக் கவனித்து வரும் எவருக்கும் அவர்களின் நோக்கம் பளிச்சென்று விளங்கும். இந்தியா முழுமைக்கும் அவர்கள் யாத்திரை நடத்துகிறபோது வழி நெடுக இந்திய மக்களின் குருதியும் சதைகளும் கொட்டிக்கிடந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு அவர்களே குண்டு வைத்தது, திருப்பூரில் தன் சொந்தக் கட்சிக்காரரின் தற்கொலையை அரசியல் மற்றும் மத அடிப்படையிலான கொலை என்று விளம்பரம் செய்து கலவரம் செய்ய முயன்றது, ராமநாதபுரத்தில் தனி நபர்களுக்கு இடையிலான மோதலை மதமோதலாக சித்தரித்து வன்முறையைத் தூண்ட முயன்றது.

பாஜகவின் சில நிர்வாகிகளே தங்கள் வீட்டில் குண்டு எறிந்து சிறுபான்மை மக்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும், போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கோரியதும் என இவர்களுடைய வரலாறு முழுவதும் வன்முறையைத் தூண்டுவதும், அந்தப் பழியை இதர இயக்கங்கள் மீது திணிப்பதுமாகவே இருந்து வந்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க கரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் வட மூலையிலிருந்து தென் மூலை வரை கட்டுப்பாடுகள் இருக்கும் இந்தக் காலத்தில் யாத்திரை நடத்த அனுமதிப்பது அவர்களின் விஷம் கலந்த பிரச்சாரத்தைப் பரப்புவதோடு கொடிய நோயையும் பரப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடும்.

எனவே, நோய்ப் பேரிடர் காலத்தின் கட்டுப்பாடுகளை மீறி, கலவர அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த 'வேல் யாத்திரைக்கு' தடை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது” .

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x