

மக்களவை, மாநிலங்களவை சபாநாயகர் மூலமே தனித்தனியாக தேர்தல் அல்லது ஒருமித்த கருத்து அடிப்படையிலே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எம்.பி.,க்களை உறுப்பினர்களாக நியமிக்க முடியும் என்பதாலே மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு தற்போது எம்.பி.க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் அமையும் ய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நேரடியாக வந்து அடிக்கல் நாட்டிச் சென்றும் இதுவரை இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை.
இந்த மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட 199.24 ஏக்கர் நிலமும் பொட்டல் காடாக காணப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செயல்பாடுகள் அனைத்தும் அறிவிப்புகளாகவும், காகித அளவிலும் மட்டுமே உள்ளன. இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. டெண்டரும் கோரப்படவில்லை. கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடந்த சில மாதமாக ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கிவிடும், ஒப்பந்தம் போடப்பட்டுவிடும் என்று கூறி வருகிறார். ஆனால், இதுவரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை விஷயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தலைவர் மற்றும் 14 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழுவையும் நியமித்து உத்தரவிட்டிருந்தது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 3 எம்.பிக்கள் உள்பட மொத்தம் 17 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், நேற்று வெளியான அறிவிப்பில் மத்திய, மாநில அரசு செயலாளர்கள், மருத்துவ வல்லுநர்களை உள்ளடக்கிய 14 பேர் குழு மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர்.
எம்.பி.க்கள் யாரும் இடம்பெறவில்லை. இதுகுறித்து மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குழுவில் மக்களவை உறுப்பினர்களை சேர்க்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு எம்.பி இல்லாத காரணத்தால் எய்ம்ஸ் குழுவில் எம்.பி.க்கள் யாரும் இடம்பெறவில்லை," என்று குற்றஞ்சாட்டினார்.
ஏற்கெனவே இடம் தேர்வு முதல் நிதி ஒதுக்குவதுவரை ஏற்பட்டுள்ள நீண்ட தாமதத்தால் திரிசங்கு நிலையில் நிற்கும் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை விவகாரத்தில் தற்போது கார்த்தி சிதம்பரம் எம்.பி.,யின் குற்றச்சாட்டு புது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும், கார்த்தி சிதம்பரம் கருத்தை போல் கூறியிருந்தார்.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் (தெலுங்கானா) மாணிக்கம் தாகூர் எம்.பி.யிடம் கேட்டபோது, ‘‘தவறான தகவல் பரவுகிறது. மக்களவை, மாநிலங்களவையில் தனித்தனியாக சபாநாயகர் மூலம் தேர்தல் அல்லது ஒருமித்த கருத்து அடிப்படையிலே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எம்.பி.,க்களை நியமிக்க பரிந்துரை செய்யப்படுவார்கள். மத்திய அரசு நேரடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எம்.பி,க்களை உறுப்பினர்களாக நியமிக்க முடியாது. அதனாலேயே, தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடனடியாக எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படவில்லை ’’ என்றார்.