

சசிகலாவை விமர்ச்சிப்பவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று திவாகரன் எச்சரித்துள்ளார்.
மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிட கழக பொதுச் செயலாளருமான திவாகரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கல்வித்துறையில் உரிய நடைமுறையை தமிழக அரசு ஏற்படுத்தவில்லை. ஏசி அறையில் அமர்ந்துகொண்டு பள்ளி திறப்புகள் குறித்து பேசுவது சரியல்ல. தற்போதையை அதிமுக அமைச்சர்கள் அறிவூபூர்வமாக சிந்திப்பவர்கள் அல்ல.
அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து வெளிப்படையாக முடிவு எடுக்க வேண்டும்.
யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஸ்டாலினை பாராட்டியபோது திமுகவில் இணையப்போவதாக கூறினர். அது உண்மையல்ல. நான் எப்போதும் மூன்று கரை வேட்டியை மாற்ற மாட்டேன். நல்லது செய்பவர்களை பாராட்டுவதில் தவறில்லை.
சசிகலாவிற்கு தண்டனை காலம் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளிவருவார். சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டாம் என வலியுறுத்தினேன். சசிகலாவைச் சுற்றி நிறைய சதிகள் நடைபெற்றது.
ஜெயலலிதா இறந்தவுடன் மூன்று பேர் முதல்வராக வேண்டும் என முயன்றார்கள். சசிகலா ஒப்படைத்த வேலையை எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்பாகக் கையாண்டார். சசிகலா குறித்து ஈபிஎஸ் - ஓபிஎஸ் இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. சசிகலா குறித்து விமர்சிப்பவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது.
மத்திய அரசால் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. தமிழகம் அபாயகரமான சூழலில் உள்ளது. தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. டிடிவி தினகரனே ஒரு ஸ்லீப்பர் செல் தான். அவருக்கு ஸ்லீப்பர் செல் தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.