பாஜக கொடிக் கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய விவகாரம்: புகார் மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

பாஜக கொடிக் கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய விவகாரம்: புகார் மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
Updated on
1 min read

பாஜகவின் கொடியை ஏற்றக்கூடிய கொடிக் கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவமரியாதை செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதையடுத்து, பாஜகவின் கொடியை ஏற்றக்கூடிய கொடிக் கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், இல.கணேசன் ஆகியோருக்கு எதிராக முகப்பேரைச் சேர்ந்த குகேஷ் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் வழக்குப் பதிவு செய்யக் கோரி குகேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “பாஜக கட்சியின் கொடிக் கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றியது தேசியக்கொடி விதிகள் மற்றும் தேசியச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்படி குற்றம் என்பதால் எல்.முருகன், இல.கணேசன், வானதி சீனிவாசனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்குக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in