Last Updated : 29 Oct, 2020 02:18 PM

 

Published : 29 Oct 2020 02:18 PM
Last Updated : 29 Oct 2020 02:18 PM

ஸ்டாலின், உதயநிதியைக் கண்டித்து கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைக் கண்டித்து கோவை மாநகரில் அதிமுக கட்சியினர் கறுப்புச் சட்டை அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் குறித்து அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினரைக் கண்டித்து கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கோவை மாநகர் முழுவதும் 28 இடங்களில் இன்று (அக். 29) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து கலந்துகொண்டனர்.

கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜூனன் எம்எல்ஏ தலைமை வகித்தார். அதேபோல், கணபதி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பி.ஆர்.ஜி அருண்குமார் எம்எல்ஏ, துடியலூர் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வி.சி.ஆறுக்குட்டி எம்எல்ஏ தலைமை வகித்தனர். அதேபோல், அந்தந்தப் பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தந்தப் பகுதிகளில் பொறுப்புகளில் உள்ள அதிமுக நிர்வாகிகள் தலைமை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினர். மேலும், திமுக குறித்தும், அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள், நிர்வாகிகள் செய்த ஊழல்கள் குறித்தும் பேசினர்.

அதோடு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் திமுகவின் ஊழல்கள் குறித்து எழுதப்பட்ட பதாகைகளையும் கைகளில் ஏந்தியடி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆளும் அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மாநகரில் காவல் ஆணையர் சுமித்சரண், துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x