Last Updated : 29 Oct, 2020 01:09 PM

 

Published : 29 Oct 2020 01:09 PM
Last Updated : 29 Oct 2020 01:09 PM

'ஆளுநர் அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்': 7.5% உள் ஒதுக்கீடு வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை கருத்து

அரசியலமைப்புச் சட்டப்படி நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனினும் ஆளுநர் அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும் என 7.5% உள் ஒதுக்கீடு கோரும் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும், முத்துக்குமார் ஆகியோர் மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளன. 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தனர். தலைமைச் செயலருடன் 5 அமைச்சர்களும் அனைத்து கோணங்களிலும் ஆலோசித்துள்ளனர். ஆளுநர் இது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவைப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், "சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விரைவாக முடிவெடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் பல கட்ட ஆலோசனை, யோசனைகளுக்குp பிறகே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் பல கோணங்களில் ஆலோசிக்க மேலும் அவகாசம் தேவையா? நமது நாட்டில், சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் அதிகளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை.

நீதிமன்ற நீதிபதிகள் பலர் ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருப்பதாக தரமற்ற வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. அது தொடர்பாக அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போல கருத்து தெரிவிப்பவர்களுக்கு நீதிமன்றம் கண்டம் தெரிவிக்கிறது.

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலர் இணைந்து இந்த மசோதாவை உருவாக்கியிருக்கிறார்கள். இதில், கூடுதல் கால அவகாசம் கேட்பது விசித்திரமானது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட சூழலில் விரைவாக முடிவெடுக்கப்பட வேண்டும். இது போல சூழல்கள் எழாது எனும்
நம்பிக்கையின் காரணமாகவே ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கவோ, உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சட்டம் இயற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், "இது போன்ற முடிவுகளில், நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க போதுமான அளவு கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என விதிகள் உள்ளன" எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள்," சூழல், அவசரம், அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விரைவாக முடிவெடுக்க வேண்டும். ஆளுநருக்கு உத்தரவிடவோ, காலக்கெடுவை விதிக்கவோ இயலாது என்பது நீதிமன்றத்திற்கு தெரியும். ஆனால் ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்வது அவசியமானது என நீதிமன்றம் கருதுகிறது. நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனினும் அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும். பிற மாநிலங்களில் நீட் முடிவு வெளியான பின்னர் என்ன நிலை உள்ளது?" எனக் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில்,"கர்நாடகாவில் மாநிலங்களில் இது போல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனை உறுதி செய்து தகவல் தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x