

சென்னை, ஓமாந்தூரார் எஸ்டேட், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ-சுகாதாரப் பணியாளர்கள், கோவிட்-19 சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் நுரையீரல் தன்மை, இருதய திறன் ஆகியவற்றை பரிசோதித்து வருகின்றனர்.
கோவிட்-19-லிருந்து மீண்டு நலம் பெற்றவர்களின் நுரையீரல் தன்மையையும் இருதய ஆரோக்கியத்தையும் பரிசோதிக்க அவர்களை 6 நிமிடம் நடக்க வைக்கின்றனர். பிறகு பிளாட்பார்ம் ஒன்றில் மேலும் கீழும் ஏறி இறங்குமாறு செய்கின்றனர். நுரையீரல் நிலையை நெருக்கமாக அவதானிக்க சிடி மார்பு ஸ்கேன் எடுக்கின்றனர்.
இதில் 98% நோயாளிகளுக்கு கரோனா பாதிப்பிலிருந்து நுரையீரல் குணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது
6 நிமிட நடைப்பயிற்சி, ஹார்வர்டு ஸ்டெப் டெஸ்ட் மற்றும் இசிஜி ஆகியவை கோவிட் 19 நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மேற்கோள்ளப்படும் பரிசோதனைகளாகும். டிஸ்சார்ஜ் ஆகி 6 வாரங்களுக்குப் பிறகு நோயாளிகளுக்கு மீண்டும் சோதனை செய்து நுரையீரல், இருதயம், கண்கள் ஆகியவற்றின் செயற்பாட்டுத்திறனை அறுதியிடுகின்றனர். இதோடு உளவியல் ரீதியாக அவர்கள் எப்படி உணர்கின்றனர் என்பதும் அறுதியிடப்படுகிறது என்று சென்னை மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “கோவிட்டுக்குப் பிந்தைய புறநோயாளிகள் பிரிவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவரகளுக்கென்றே டெஸ்ட் செய்யும் வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நடக்க வைத்து நுரையீரல் செயல்பாட்டை நாங்கள் அறுதியிடுகிறோம். டெஸ்ட்டுக்கு முன்னும் பின்னும் பிராணவாயு அளவு, இருதய துடிப்பு ஆகியவற்றை அளவிடுகிறோம். ஹார்வர்ட் டெஸ்ட் என்பது எந்த அளவுக்கு அவர்களால் நடக்க முடிகிறது அவர்களின் உச்சபட்ச பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவு என்ன என்பதை அறுதியிடும் அடிப்படை டெஸ்ட் ஆகும் நுரையீரல் மற்றும் இருதயத் திறனை அளவிடுகிறோம்” என்றார்.
அக்.1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த பரிசோதனைகளில் இதுவரை 186 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்டிலிருந்து மீண்ட 148 ஆண்கள், 38 பெண்களுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 85 பேருக்கு நீரிழிவு நோய் இருந்தது. 48 பேருக்கு ரத்தக்கொதிப்பு இருந்தது. இருவருக்கு ரத்தநாள பிரச்சினை இருந்தது. புறநோயாளிகளுக்கான இடத்தில் பிஎம்ஐ இயந்திரம் உள்ளது. நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், மூச்சுப்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
கரோனாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களில் 98% பேருக்கு கரோனாவுக்கு பிந்தைய இத்தகைய சோதனைகளில் நுரையீரல் செயல்பாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக இந்த மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.