Published : 29 Oct 2020 12:08 PM
Last Updated : 29 Oct 2020 12:08 PM

கரோனா களத்தில் சேவையாற்றும் பாரம்பரிய இயற்கை மருத்துவர்களுக்கு விருது: உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு வழங்குகிறது

கோப்புப்படம்

சென்னை

கரோனா பேரிடர்க் காலத்தில் தமிழகத்தில் மாற்று மருத்துவத்தில் முக்கியப் பங்காற்றி வரும் தமிழ் மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவர்களுக்கு ஆயுஷ் எக்ஸலன்ஸ் விருதை வழங்கி உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு.கவுரவிக்க உள்ளது.

கரோனா களத்தில் சிறந்த சேவையாற்றி வரும் மருத்துவத் துறை, தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களைப் போற்றும் வகையில் ‘ஆயுஷ் எக்ஸலன்ஸ்’ விருதுகளை வழங்கிக் கவுரவித்தது உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு.

இதற்காக அக்டோபர் 17-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த விருதுகளை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, தமிழ்ப் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய இயற்கை வைத்தியத்தில் கரோனா காலத்தில் சேவை செய்து வரும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களையும் கவுரவிக்கும் வகையில் ‘மெடிக்கல் எக்ஸலன்ஸ்’ விருதுகளை வழங்கி இதே அமைப்பு கவுரவிக்க உள்ளது.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய உலகத் தமிழ் வர்த்தகச் சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் கூறியதாவது:

''இந்திய அரசின் வழிகாட்டல்படி மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாரம்பரிய இயற்கை மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் ஏராளம் இருக்கின்றன. இங்கு மட்டுமே 40 கல்லூரிகள் இருக்கின்றன. இதுபோன்ற இயற்கை வழி மருத்துவக் கல்லூரிகளில் முறையாகப் படித்துப் பட்டம்பெற்ற ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி, யோகா மருத்துவர்கள் இந்தக் கரோனா காலத்தில் அரும்பணி ஆற்றி வருகிறார்கள்.

இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக அளவில் இருக்கின்றன. அந்த அளவுக்கு இங்கே இயற்கை மருத்துவம் போற்றப்படுகிறது. ஆனால், பிற மாநிலங்களில் இயற்கை மருத்துவத்துக்குத் தமிழகம் அளவுக்கு இன்னும் முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. இந்தக் கரோனா காலத்தில் தமிழகத்தில் தமிழ்ப் பாரம்பரிய மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் பெருமளவுக்குக் கைகொடுத்திருக்கின்றன. இந்த வைத்தியத்தில் இருக்கும் மருத்துவர்கள், ஆயிரக்கணக்கான மக்களைக் கரோனாவிடமிருந்து காத்திருக்கிறார்கள்.

இதையறிந்து ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருக்கும் மக்கள்கூட இங்கு வந்து கரோனா தொற்றுக்குச் சிகிச்சை எடுத்து, குணமடைந்து வருகிறார்கள். அலோபதி மருத்துவர்கள் மார்க்கெட்டில் இருக்கும் மருந்துகளைத் தந்து நோயாளிகளைக் குணப்படுத்துகிறார்கள். இவர்களுக்குப் புதிதாக மருந்துகளைத் தயாரிக்கத் தெரியாது. ஆனால், பாரம்பரிய இயற்கை மருத்துவர்கள் நோயின் தன்மைக்கு ஏற்பத் தாங்களே மருந்துகளைத் தயாரித்து அளிக்கும் திறனும் பெற்றவர்கள். அப்படி இருந்தும் பாரம்பரிய, இயற்கை மருத்துவர்களுக்கு நாம் இன்னும் உரிய அங்கீகாரம் அளிக்காமலேயே இருக்கிறோம்.

இந்நிலையில், கரோனா காலத்தில் மக்களுக்குச் சிறந்த சேவையாற்றி வரும் தமிழ்ப் பாரம்பரியம் உள்ளிட்ட இயற்கை மருத்துவர்களைக் கவுரவித்துப் போற்றும் வகையில் ஆயுஷ் எக்ஸலன்ஸ் விருதுகளை உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு வழங்குகிறது.

உலகத் தமிழ் வர்த்தகச் சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார்

அரசால் அங்கீகரிக்கப்பட்ட, இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் முறையாகப் படித்துப் பட்டம்பெற்று இயற்கை மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் இந்த விருதுக்காக ayushawards@gmail.com என்ற இணைய முகவரிக்கு நேரடியாக விண்ணப்பம் செய்யலாம். தகுதியான மருத்துவர்களுக்காக மற்றவர்களும் விண்ணப்பம் அனுப்பலாம். நவம்பர் 15-ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

எங்களுக்கு வந்து சேரும் விண்ணப்பங்களை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தரம் பிரித்து, விருதுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவர் வீதம் இந்த விருதை வழங்க முடிவெடுத்திருக்கிறோம்.

விருதாளர்கள் தேர்வுக்குப் பிறகு டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் விருது வழங்கும் விழா நடைபெறும். இந்த விழாவுக்காகத் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பி இருக்கிறோம். இவர்கள் நேரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமையாத பட்சத்தில் காணொலி மூலம் கலந்துகொள்ளச் சம்மதித்திருக்கிறார்கள். விருதுகளைத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்குகிறார்கள்.''

இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x