Published : 29 Oct 2020 06:50 AM
Last Updated : 29 Oct 2020 06:50 AM

அதிமுகவில் அமைப்பு ரீதியாக சென்னையில் மேலும் 3 மாவட்டங்கள் உருவாக்கம்: ஜெயக்குமார் உள்ளிட்டோர் செயலாளர்களாக நியமனம்

அதிமுகவில் வடசென்னை, தென்சென்னை மாவட்டங்களில் நிர்வாக ரீதியாக புதிய 3 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாவட்டசெயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் நிர்வாக ரீதியாக50-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மாவட்டசெயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, பதவியின்றி உள்ள பல்வேறு நிர்வாகிகளுக்கு பதவி அளிக்கும் வகையில் சென்னையில், வட சென்னைவடக்கு (கிழக்கு), மேற்கு, வடசென்னை தெற்கு,தென் சென்னைவடக்கு,தென்சென்னை மேற்குஆகிய மாவட்டங்கள் ஏற்கெனவேசெயல்பட்டு வருகின்றன.

6 மாவட்டங்கள்

இதில், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகள் அடங்கிய வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக ஆர்.எஸ்.ராஜேஷ், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகள் அடங்கிய வடசென்னை வடக்கு (மேற்கு) - வெங்கடேஷ் பாபு, வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளராக பாலகங்கா, தென்சென்னை வடக்கு மாவட்டத்துக்கு தி.நகர் சத்யாவும், மேற்கு மாவட்டத்துக்கு விருகை வி.என்.ரவியும் மாவட்டசெயலாளர்களாக உள்ளனர். இந்நிலையில் தற்போது வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு,தெற்கு மாவட்டங்கள் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

நிர்வாக வசதிக்காக..

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும், கட்சிப்பணிகளை விரைவுபடுத்தவும், வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்கள் தலா 2 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கி வருமாறு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ராயபுரம், திருவிக நகர் (தனி) தொகுதிகள் அடங்கிய வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்துக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், எழும்பூர் (தனி), துறைமுகம் தொகுதிகள் அடங்கிய வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்துக்கு முன்னாள் வாரியத் தலைவர் நா.பாலகங்கா, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு தொகுதிகள் அடங்கிய தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தி.நகர், அண்ணா நகர் தொகுதிகள் அடங்கிய தென்சென்னை வடக்கு(தெற்கு) மாவட்ட செயலாளராக தி.நகர்பி.சத்யா, மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதிகளை உள்ளடக்கிய தென்சென்னை தெற்கு (கிழக்கு)மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ எம்.கே.அசோக், விருகம்பாக்கம், சைதாப்பேட்டைதொகுதிகள் அடங்கிய தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக விருகை வி.என்.ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

கட்சியின் அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் மாவட்ட செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கட்சிப்பணிகளை ஆற்றவேண்டும். கழகம் மற்றும் சார்புஅமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போதுள்ள நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் மூலம் அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம் மற்றும்முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x