Published : 29 Oct 2020 06:48 AM
Last Updated : 29 Oct 2020 06:48 AM

தேசிய பள்ளி விளையாட்டில் பதக்கங்கள் வென்ற 14 மாணவர்களுக்கு ரூ.54 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த 14 பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.54 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான 64-வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 266 மாணவர்கள், 28 விளையாட்டுகளில் 88 தங்கம், 107 வெள்ளி, 109 வெண்கலப் பதக்கங்களையும், 306 மாணவியர் 29 விளையாட்டுகளில் 135 தங்கம், 100 வெள்ளி, 113 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் என்று ரூ.9 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, பதக்கங்கள் வென்ற சென்னை செவன்த்டே அட்வென்டிஸ்ட் பள்ளி மாணவர்கள் எஸ்.நவனீத் பிரபுவுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம், ஆர்.கிஷோர் அரவிந்த்துக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், ஆர்.பூஜா ஆர்த்திக்கு ரூ.4 லட்சம், ஜெ.எஸ்.கிருத்திகாவுக்கு ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம், சென்னை ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.அக்சயாவுக்கு ரூ.4 லட்சம், கேரம் விளையாட்டில் பதக்கம் வென்ற சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.அபுஅசேனுக்கு ரூ.3 லட்சம், சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர் என்.மிதுனுக்கு ரூ.3 லட்சம் ஆகியவற்றுக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

ஸ்கேட்டிங்கில் பதக்கம் வென்ற எஸ்பிஓஏ பள்ளி மாணவர் எஸ்.கிஷோர் வெங்கடேஷ்க்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், சென்னை செயின்ட் மைக்கேல் மேல் நிலைப்பள்ளி மாணவி செல்வி எஸ்.மீனலோக்ஷினிக்கு ரூ.5 லட்சம், நீச்சலில் பதக்கம் வென்ற செயின்ட் மைக்கேல் பள்ளி மாணவர் ஆல்பிரட் ராஜனுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், சென்னை எம்சிசி பள்ளிமாணவி பி.பிரீத்திக்கு ரூ.6 லட்சம்,தடகளத்தில் பதக்கம் வென்ற ஜெய்கோபால் கரோடியா அரசுப்பள்ளி மாணவி பி.எம்.தபிதாவுக்கு ரூ.7 லட்சம், வித்யோதயா மகளிர் பள்ளி மாணவி ஆர்.கிரிதாரணிக்கு ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம், புல்தரை டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற அழகப்பா மெட்ரிக் பள்ளி மாணவி பண்டாரு குந்தனாக்கு ரூ.4 லட்சம் என மொத்தம் 14 மாணவ, மாணவியருக்கு ரூ.54 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

பவானிதேவிக்கு ரூ.15 லட்சம்

மேலும், வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானிதேவிக்கு பெல்ஜியம், ஐஸ்லாந்து நாடுகளில் கடந்த ஆண்டில் நடைபெற்ற போட்டிகளில் வென்றதற்காக ரூ.15 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலர் கே.சண்முகம், செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x