

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அண்ணா காலத்தில் இருந்தே சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான இடஒதுக்கீடு வழங்குவது குறித்த சர்ச்சை சமீபத்தில்எழுந்து பெரும் பிரச்சினைக்குரியதாக மாறியது. எம்பிபிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ‘நீட்’ தேர்வு அறிமுகப்படுத்தியதில் இருந்து தமிழகத்தில் இத்தேர்வுக்கு எதிராக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் சர்ச்சை என்பது புதிதல்ல. தமிழகத்தில் 1961-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை விதி 8-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த விதியின்படி, மாவட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராகவழக்குகள் தொடரப்பட்டு இறுதியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வாஞ்சூ தலைமையிலான அமர்வு, விதி-8ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் செல்லாது என்று உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில்புதிய முறை கொண்டு வரப்பட்டது.அண்ணா முதல்வராக இருந்தபோது, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தகுதி அடிப்படையில் இருக்கும் என்று அறிவித்தார். பின்னர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுக்கள் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டன.
கடந்த 1970-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஷா, ஹெக்டே, குரோவர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியலை முழுமையாக ரத்து செய்து, புதிதாக மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டது. பின்னர் மற்றொரு வழக்கில் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு ஆண்டும் முடிப்பதற்கான கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2010-ம் ஆண்டு இந்தியமருத்துவக் கவுன்சிலின் முறைகேடுகளுக்கு முடிவுகட்ட அதைவிட அதிகாரம் படைத்த அமைப்பாக நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த பரிந்துரையின்பேரில், நாடு முழுவதும் ஒரே தேர்வாக ‘நீட்’ தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட மனுக்களை தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்த தன் அடிப்படையில், ‘நீட்’ தேர்வு சட்டவிரோதம் என்று 2013-ம்ஆண்டு தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
பின்னர் 2016-ம் ஆண்டு ‘நீட்’தேர்வு செல்லும் என்று உத்தரவிடப்பட்டு, நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் தமிழகத்தில் அரசியல் செய்வதற்கு ஏற்ற மிக முக்கிய பிரச்சினைகளான காவிரி, இந்தி திணிப்பு போன்றவற்றோடு ‘நீட்’ தேர்வும்இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.