

அந்த்யோதயா உள்ளிட்ட முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும்வகையில் நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு, 300-க்கும் மேற்பட்டசிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள்,மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படும் கட்டண சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை. முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இந்த ரயில்களில் கிடையாது.
தீபாவளி பண்டிகை நெருங்கவுள்ள நிலையில் சாதாரண ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் முன்பதிவு இல்லாத ரயில்களையும், சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்தும் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கிடையே, ரயில்வே வாரியம் சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஜன்சாதாரன், ஜனசேவா மற்றும்அந்த்யோதயா போன்ற முன்பதிவு இல்லாத ரயில்கள், விரைவு ரயில்களில் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இவ்விஷயத்தில் அந்தந்த ரயில்வே மண்டலங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.