Published : 29 Oct 2020 06:33 AM
Last Updated : 29 Oct 2020 06:33 AM

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: அமைச்சர் தலைமையில் நடந்த நலவாரிய கூட்டத்தில் ஒப்புதல்

பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கஅமைச்சர் நிலோஃபர் கபீல்தலைமையில் நடந்த வாரிய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் 33-வது கூட்டம் சென்னையில் உள்ள நலவாரிய கூட்டரங்கில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபீல்தலைமையில் நடந்தது. இதில் தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய செயலாளர் சு.பொன்னுசாமி, வாரிய பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 13 லட்சம் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அடுத்தஆண்டு பொங்கலை முன்னிட்டு ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி, துண்டு, பெண் தொழிலாளர்களுக்கு புடவை ஆகியவற்றுடன் ஒவ்வொருவருக்கும் பொங்கல் தொகுப்பை முதல்வர் அனுமதியுடன் வழங்க வாரிய உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

மேலும், கூட்டுறவு வங்கிகளின் கணக்கு வைப்புக்கும் தொழிலாளர்கள் வங்கிக் கணக்குகளிலும் நலத்திட்ட உதவிகளை மின்னணு பரிமாற்றம் மூலம் பணம் செலுத்துதல், இரண்டாம்படி அடையாளத்துக்கான கட்டணத்தை நீக்குதல், பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குதல், இதர இடங்களில் விபத்தின்காரணமாக ஊனம் ஏற்படும் தொழிலாளர்களுக்கும் செயற்கை உறுப்புகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் வாரிய உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

கடந்த 2011, மே 16 முதல் இந்தஆண்டு செப்.30 வரை 10 லட்சத்து35 ஆயிரத்து 615 கட்டுமானத் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு, 14 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.674 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x