

சென்னையில் மே 1-ம் தேதி நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பருசூரி (23) பலியானார்.
இந்நிலையில், பெங்களூரில் அவர் தங்கியிருந்த விடுதியிலும், பணியாற்றிய நிறுவனத்திலும் சனிக்கிழமை தமிழக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பலியான ஸ்வாதியின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான குண்டூருக்கு கடந்த வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டது. உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்பு, வெள்ளிக்கிழமை மாலை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை பெங்களூர் வந்தனர். பெங்களூரில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த இரு நாட்களாக தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
டிசிஎஸ் நிறுவனத்தில்
இந்நிலையில், ஸ்வாதி பெங்க ளூரில் பணியாற்றிய டி.சி.எஸ். தனியார் நிறுவனத்தில் சனிக்கிழமை காலை சிபிசிஐடி போலீஸார் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தினர். ஸ்வாதியுடன் பணியாற்றியவர்கள், அவருக்கு நெருக்கமான நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
தோழிகளிடம் விசாரணை
பின்னர், பெங்களூர் சீதாராம் பாளையா பகுதி, ஐ.டி.பி.எல். மெயின் ரோட்டில் உள்ள ஸ்வாதி தங்கியிருந்த ராம் சாய் விடுதிக்கு சென்றனர். விடுதியின் உரிமையாளர், காப்பாளர், ஸ்வாதியின் அறைத் தோழிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ஸ்வாதி கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தான் இந்த விடுதியில் சேர்ந்துள்ளார்.
அதற்கு முன்பு வேறொரு விடுதியில் கடந்த டிசம்பர் முதல் மார்ச் வரை தங்கியிருந்ததாகத் தெரியவந்தது. ஸ்வாதிக்கு நெருக்கமானவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்