

மழை, வெயிலால் பாதிக்கப்பட்டு 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குனர் சுதாதேவி பதில் மனுத் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 862 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
குறுவை பருவத்தில் அதிகளவு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது இதுவே முதல் முறை. மேலும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
கரோனா காலத்தில் 2.48 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 12.77 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2416 கோடி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய பருவத்தில் 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு ரூ.6130 கோடி வழங்கப்பட்டது.
தினமும் 16000 மெட்ரிட் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. முன்பு 800 மூடைகள் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது அது ஆயிரம் மூட்டைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இடைத்தரகர்களை தவிர்க்க விவசாயிகளிடம் சிட்டா, அடங்கல் கேட்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பலன் பெறுவர்.
கடந்த பருவத்தில் கொள்முதல் மையங்களில் சிறப்புக்குழுக்கள் 1725 ஆய்வுகள் நடத்தினர். அப்போது முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளுக்கு தானியங்கி மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது.
அதன்படி விவசாயிகள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்த நெல்லை கொள்முதல் மையங்களில் வழங்கலாம். மழை மற்றும் வெயில் காலத்தை கருத்தில் கொண்டு 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு மூடைக்கு ஊழியர்கள் ரூ,30 முதல் 40 வரை லஞ்சம் கேட்கிறார்கள் என்பது உண்மையல்ல. நெல் கொள்முதலுக்கு தேவையான சாக்கு மூடைகள் தேவையான அளவு உள்ளது.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.