

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மேலகரம் ஆயிரப்பேரியில் கட்டும் திட்டம் இல்லை. வேறு இடம் தேர்வு செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
நெல்லை நாரணபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தென்காசி மாவட்டத்திற்கான புதிய ஆட்சியர் அலுவலகம் மேலகரம் பேரூராட்சியில் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் குற்றாலம் மெயின் அருவி, காட்டாறு, செண்பகாதேவி அருவியிலிருந்து தென்கால் பாசனத்துக்கு தண்ணீர் வரும் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆட்சியர் அலுவலகம் கட்டினால் விவசாயம் பாதிக்கும்.
ஆலங்குளம், மலைக்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு ஆட்சியர் அலுவலகம் கட்டலாம். எனவே, விவசாய நிலங்கள் பாதிக்காமல் இருக்கவும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் மேலகரத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை விதித்து, வேறு பகுதியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதே கோரிக்கை தொடர்பாக பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீசரன், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் ஆகியோர் வாதிடுகையில், மேலகரம் ஆயிரப்பேரியில் ஆட்சியர் அலுவலகம் கட்டும் திட்டம் இல்லை. மக்களின் நலன் கருதி ஆட்சியர் அலுவலகம் கட்ட வேறு இடம் தேர்வு செய்யப்படும் என்றனர். இதையடுத்து அனைத்து மனுக்களையும் முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.