Last Updated : 28 Oct, 2020 07:23 PM

 

Published : 28 Oct 2020 07:23 PM
Last Updated : 28 Oct 2020 07:23 PM

தமிழகத்தில் தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை

தமிழகத்தில் இந்திய தொல்லியல் கழகத்துக்கு சொந்தமான தொல்லியல் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மதுரை பொதும்பைச் சேர்ந்த புஷ்பாவனம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியா முழுவதும் 3691 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 412 தொல்லியல் நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த நினைவுச் சின்னங்களுக்கு ஆண்டு முழுவதும் பார்வையாளர்கள் வருகின்றனர்.

தமிழகத்துக்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்வதால் நினைவுச் சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் இந்திய தொல்லியல் கழகத்துக்கு சென்னை, திருச்சி வட்ட அலுவலங்கள் உள்ளன. இவற்றில் போதுமான பணியாளர்கள் இல்லை.

எனவே, தமிழகத்தில் தூத்துக்குடி அல்லது ராமநாதபுரத்தில் புதிதாக தொல்லியல் வட்டம் உருவாக்கவும், தமிழக தொல்லியல் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கவும், தொல்லியல் வட்டங்களில் பணியாளர் காலியிடங்களை உடனடியாக நிரப்பவும், தமிழகம் முழுவதும் தொல்லியல் நினைவுச் சின்னங்களில் தொல்லியல் அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளவும், நினைவுச் சின்னங்களில் நவீன கழிப்பறை, உணவகம், மருந்தகம் அமைக்கவும், மாற்றுத்திறனாளிகள் பார்வையிடுவதற்கு வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மனு தொடர்பாக மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 18-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

குமரிக் கண்டம் ஆய்வு வழக்கு கடலில் மூழ்கிய குமரிக்கண்டம் தொடர்பாக கடலுக்கடியில் அகழாய்வு நடத்தக்கோரி பழனியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழர்களின் பழம்பெரும் அடையாளம் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியது. கடலுக்கு அடியில் தொல்லியல் அகழாய்வு மேற்கொண்டால் குமரிக்கண்டம் தொடர்பான ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும்.

மகாபாரதத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலம் துவாரகாவில் நீருக்கடியில் தொல்லில் அகழாய்வு நடத்தப்பட்டது. தமிழக அரசு தேசிய கடல்சார் நிறுவனத்துடன் இணைந்து நீருக்கடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

எனவே, குமரி மாவட்டத்தில் தென் பகுதியில் கடலுக்கடியில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தொடர்பாகவும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x