Published : 28 Oct 2020 07:01 PM
Last Updated : 28 Oct 2020 07:01 PM

முட்டைகோஸ் திடீர் விலையேற்றம்: மதுரையில் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை- வியாபாரிகள் அதிர்ச்சி

மதுரையில் ஒரு நாளும் இல்லாத வகையில் சென்ட்ரல் மார்க்கெட்டில் முட்டைகோஸ் கிலோ 70 ரூபாய்க்கு விற்பதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

அதனால், சென்டரல் மார்க்கெட்டில் நிர்ணயியக்கப்படும் விலை தென் தமிழகத்தில் விற்கப்படும் காய்கறிகளின் விலையில் எதிரொலிக்கும்.

கடந்த 2 வாரமாக சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை போட்டிப்போட்டு உயர்ந்த நிலையில் தற்போது அதன் விலை குறைய ஆரம்பித்துள்ளது.

ஆனாலும், இன்னும் பெரியளவிற்கு விலை குறையவில்லை. காய்கறிகள் வரத்து ஒரளவு அதிகரித்துள்ளதால் அதன் விலை கட்டுக்குள் உள்ளது. ஆனாலும், ஒரு நாளும் இல்லாதவகையில் இன்று மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் முட்டைகோஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், ‘‘முட்டைகோஸ், வழக்கமாக ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு விற்கும். தற்போது பெங்களூரு, கொடைக்கானலில் இருந்து வரத்து இல்லாததால் கிலோ 70 ரூபாய்க்கு விற்கிறது.

சமீப காலத்தில் இதுவரை முட்டைகோஸ் விலை உயரவில்லை. பட்டர் பீன்ஸ் 125 முதல் 150 ரூபாய் வரையும், சோயா பீன்ஸ் 100 ரூபாய்க்கும் விற்கிறது.

தக்காளி, கத்திரிக்காய் விலை மட்டும் குறைவாக விற்கிறது. தக்காளி 15 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும், கரட் 50 முதல் 60 ரூபாய் வரையும் விற்கிறது. பிட்ரூட் 30 ரூபாய்க்கும், சேனைகிழங்கு 25 ரூபாய்க்கும், கருனை கிழங்கு 50 ரூபாய்க்கும் விற்கிறது. புடலங்காய் 25 ரூபாய்க்கும், பாகற்காய் 30 ரூபாய்க்கும், சின்ன பாகற்காய் 75 ரூபாய்க்கும் விற்கிறது. சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 70 முதல் 80 ரூபாய்க்கும் விற்கிறது. உருளை கிழங்கு 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்கிறது. சுரங்காய் 20 ரூபாய், சினரைக்காய் 25 ரூபாய்க்கு விற்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x