

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக தலைமையிலான கூட்டணி தயாராகிவிட்டது, என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வேளாண் திருத்தச் சட்டத்தை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வேளாண் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். வெங்காயம் விலை நூறு ரூபாய்க்கு மேல் போய்விட்டது. வெங்காயம் சாமானியர்களின் உணவு. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கி குடோன்களில் இருப்பு வைத்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக விலைக்கு விற்பர். இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும்.
உலக அதிசயங்களில் ஒன்றாக கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் மக்களின் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சாமானியர்கள் பற்றி மத்தி அரசுக்கு கவலை இல்லை. சாமானியர்களை பற்றி கவலைப்படும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக தலைமையிலான கூட்டணி தயாராகிவிட்டது.
கன்னியாகுமரி இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் சிறந்த பணிகளால் காங்கிரஸ் வெற்றி பெறும். நரேந்தி மோடியும், அமித் ஷாவும் ஆட்டுவிக்க தமிழகத்தில் இபிஎஸ்., ஓபிஎஸ். ஆடுகின்றனர்.
நடிகை குஷ்பு காங்கிரஸ் கூட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து பேசிய நிலையில், 360 டிகிரி திரும்பியது போல் சில தினங்களிலேயே பாரதிய ஜனதாவில் சேர்ந்து காங்கிரஸ் பற்றி பேசுகிறார். அவருக்கு என்ன அழுத்தம் தரப்பட்டது எனத் தெரியவில்லை. அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தமிழக ஆளுனர் அலுவலகம் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிடமாக செயல்பட்டுவருகிறது.
அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறையைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நவம்பர் 5 ம் தேதி தர்ணா நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.