

கரோனாவால் மூடப்பட்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க விதிக்கப்பட்ட தடையை விலக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கள்ளிக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மார்க்கெட் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி காந்தி மார்க்கெட் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது.
பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்காலிக மார்க்கெட் செயல்படுகிறது. தற்போது காந்தி மார்க்கெட்டை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
காந்தி மார்க்கெட்டால் திருச்சி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.77.6 கோடியில் கள்ளிக்குடியில் புதிய மார்க்கெட் கட்டப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டுவரவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது காந்தி மார்க்கெட்டை திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தடையை நீக்க மறுத்து, கள்ளிக்குடி மார்க்கெட் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.