Published : 28 Oct 2020 05:01 PM
Last Updated : 28 Oct 2020 05:01 PM

தமிழகத்தில் 35%க்கு மேற்பட்ட மக்கள் முகக்கவசம் அணிவதில்லை; கரோனா பரவல் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் 35 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் முகக்கவசம் அணிவது கிடையாது. கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான அரசின் ஆலோசனைகளை பொதுமக்கள் சரிவரக் கடைப்பிடிப்பதில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக். 28) தலைமைச் செயலகத்தில், மாவட்ட ஆட்சியர்களுடனான கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:

"கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு ஏற்கெனவே பல்வேறு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், பொதுமக்கள் அதைச் சரிவரக் கடைப்பிடிப்பது கிடையாது. மாவட்ட நிர்வாகம் கவனமாக இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வெளியிலே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொருட்களை வாங்குகின்றபோது தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வீட்டுக்குச் சென்றவுடன் கைகளைச் சுத்தமாகச் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தால்தான் கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். மாவட்ட நிர்வாகம், இதற்கான விழிப்புணர்வை மக்களிடத்தில் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். இப்போது தமிழகத்தில் 35 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் முகக்கவசம் அணிவது கிடையாது. எனவே, அனைவரும் முகக்கவசம் அணியக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான், இந்த நோயினுடைய தன்மை, அறிகுறி மற்றும் வீரியத்தை உணராமல் இருக்கும் காரணத்தினால்தான், முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். ஆகவே, மாவட்ட நிர்வாகம் கவனமாகச் செயல்பட்டு, அனைவரையும் முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும்.

இப்போது தீபாவளி பண்டிகை வரவிருக்கின்றது. சென்னை மாநகரத்தில் தெருக்கள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. பலர் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றார்கள். காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் முகக்கவசம் அணியக்கூடிய சூழ்நிலை உருவாகும், நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.

கரோனா வைரஸ் நோய் இருக்கின்ற பகுதிகளில், தொடர்ந்து கிருமிநாசினி தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதோடு, பொதுக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை தொடங்குகின்ற இந்தச் சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் எங்கும் தண்ணீர் தேங்காமல் மாவட்ட நிர்வாகம் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஆகவே, மாவட்ட நிர்வாகம் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும்.

அரசு அறிவித்த பசுமை வீடு திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து, அப்பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் மூலம், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் சரியாக எரிகின்றனவா என்றும், அப்படியில்லையென்றால் அதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.

இவை எல்லாம் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற பணி. அதேபோல், நியாயவிலைக் கடைகளின் அத்தியவாவசியப் பொருட்கள் முழுவதும் மக்களுக்குத் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சில மாவட்டங்களில் திடீரென்று அதிகரித்து விடுகிறது. அப்படி அதிகரித்துவிடாமல் மாவட்ட ஆட்சியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருசில மாவட்டங்களில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கு மேல் இருக்கிறது. தீபாவளி வருவதற்குள் 100க்குக் கீழ் கொண்டுவர வேண்டும். இன்னும் சில மாவட்டங்களில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்குக் கீழ் இருக்கிறது, அதை 50க்கும் கீழ் குறைக்க வேண்டும். 50க்குக் கீழுள்ள மாவட்டங்களில் பெரும்பாலும், கரோனா வைரஸ் நோய்ப் பரவல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

நோய்ப் பரவல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வேகமாக, துரிதமாக நடவடிக்கை எடுத்து அதற்குண்டான பணிகளைச் செய்ய வேண்டும்.

சட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை, காவல்துறை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டம், ஒழுங்கைச் சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றார்கள். அதையெல்லாம் கவனமாகக் கண்காணித்து, மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, காவல்துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாவட்ட ஆட்சியர்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் ஒருமித்த கருத்தோடு பணியாற்றிய காரணத்தினால், கரோனா வைரஸ் நோய்ப் பரவல் தமிழகத்திலே படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது, இது வரவேற்கத்தக்கது. இன்னும் குறுகிய காலத்தில், தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்ப் பரவல் இல்லை என்ற நிலையை உருவாக்க நீங்கள் பாடுபட வேண்டும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x