அரசுப்பள்ளி மாணவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை; ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர்

மாணவரின் அறுவை சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள்.
மாணவரின் அறுவை சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள்.
Updated on
1 min read

அரசுப்பள்ளி மாணவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக முதல் கட்டமாக ரூ.1 லட்சம் நிதியுதவியை நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், சலவன்பேட்டை, குட்டைமேடு, ஆனைகுளத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவரது மனைவி கலா (39). சரவணன், சாஸ்திரி நகரில் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார்.

இவரது மூத்த மகன் ரவீந்திரன் (17). அதேபகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ரவீந்திரன் சிறுவயது முதல் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்கான சிகிச்சையை அவரது பெற்றோர் அளித்து வந்தனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பல ஆயிரம் ரூபாயை செலவழித்து ரவீந்திரனுக்கு டயாலிசிஸ் செய்து வந்தனர். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ரவீந்திரனால் சரியாக பள்ளிக்கு செல்ல முடியாததால், குறிப்பிட்ட வயதில் அவரால் ஆரம்பக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வியை முடிக்க முடியவில்லை. சிறுநீரக பாதிப்பு இருந்தும், அதை பொருட்படுத்தாமல் ரவீந்திரன் பள்ளிப்படிப்பை தொடர்ந்து வந்தார்.

நாளடைவில் ரவீந்திரனின் 2 சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரவீந்திரனுக்கு உடனடியாக மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும், அதற்கு ரூ.12 லட்சம் வரை செலவாகும் என வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதைக்கேட்டு அதிர்ந்துபோன ரவீந்திரனின் பெற்றோர், தன் மகனுக்காக தங்களது சிறுநீரகத்தை தானமாக வழங்க முன் வந்தனர்.

அதற்கும் சில லட்சங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இதைத்தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் அமைப்புகளிடம் ரவீந்திரனின் பெற்றோர் உதவியை நாடினர். ஆனால், எந்த பலனும் கிடைக்காததால் தன் மகனை காப்பாற்ற முடியுமா? என்ற அச்சம் சரவணன் - கலா தம்பதியிடையே ஏற்பட்டது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் பள்ளி மாணவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிகள் செய்திட வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு, நடிகர் விஜய் அறிவுறுத்தினார்.

அதன்படி, வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் வேல்முருகன், மாணவர் ரவீந்திரனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக முதல் கட்டமாக ரூ.1 லட்சத்தை சரவணன் மற்றும் கலாவிடம் வழங்கினார். மேலும், நிதி திரட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரவீந்திரன் அறுவை சிகிச்சைக்காக வழங்குவதாக மாணவரின் பெற்றோரிடம் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் வேல்முருகன் உறுதியளித்தார்.

மாணவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டிய நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு சரவணன்- கலா ஆகியோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in