Last Updated : 28 Oct, 2020 03:56 PM

 

Published : 28 Oct 2020 03:56 PM
Last Updated : 28 Oct 2020 03:56 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 இடங்களில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க அரசு உத்தரவாதம்; திரும்ப பெறப்பட்ட முற்றுகை போராட்டம்

புதுக்கோட்டைக்கு வந்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு மாட்டுவண்டிகளோடு அளிக்கப்பட்ட வரவேற்பு.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்காக ஆற்றில் 9 இடங்களில் மணல் குவாரி அமைக்க அலுவலர்கள் உத்தரவாதம் அளித்ததால் இன்று நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்லும் வெற்கு வெள்ளாறு, அம்புலி ஆறு, பாம்பாறு, அக்னி ஆறு போன்ற காட்டாறுகளில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் வியாபாரம் செய்வதற்காக அரசு குவாரி அமைக்க வேண்டும் என அரசிடம் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

திருச்சி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் குவாரி அமைத்து மாட்டுவண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், புதுக்கோட்டைக்கு கரோனா தடுப்பு ஆய்வுப் பணிக்கு அக்.22-ம் தேதி வந்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, சுமார் 250 மாட்டுவண்டிகளோடு விவசாயிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதும்கூட, மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்கு என தனியாக மணல் குவாரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

குவாரி அமைப்பது குறித்து ஆய்வுக்குப் பின்னர், முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் முன்னேற்றம் இல்லை.

இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை மாட்டுவண்டிகளோடு இன்று (அக். 28) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நேற்று (அக். 27) இரவு புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் முகமதலிஜின்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதில், மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்ததையடுத்து முற்றுகை போராட்டத்தை தொழிலாளர்கள் திரும்ப பெற்றனர்.

இது குறித்து சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர் கூறுகையில், "ஆற்றில் இருந்து லாரிகள், டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளி வெளி மாவட்டங்களில் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உள்ளூரில் மணலுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அரசின் திட்டத்திலான வீடு, கழிப்பறைகள்கூட கட்டமுடியாமல் தேங்கி உள்ளன.

ஏ.ஸ்ரீதர்

குறைந்த விலைக்கு உள்ளூரிலேயே தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதற்காகவும், மாட்டுவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாரத்துக்காகவும் மணல் குவாரி அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

புதுக்கோட்டை வந்த தமிழக முதல்வரை வரவேற்க சென்றபோதுகூட எங்களுக்கு குவாரி அமைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியும் கண்டுகொள்ளப்படவில்லை. எம்-சாண்ட் வியாபாரம் செய்யும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே மாட்டுவண்டிகளுக்கான குவாரி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது.

இதையடுத்துதான், புதுக்கோட்டையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை 500 மாட்டு வண்டிகளோடு முற்றுகையிடுவது என அறிவிக்கப்பட்டது. கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கறம்பக்குடி, மழையூரில் அக்னி ஆறு, ஆவுடையார்கோவில், அரிமளம், கடையக்குடியில் வெள்ளாறு, குடுமியான்மலையில் பாம்பாறு, விராலிமலையில் கோரையாறு உட்பட 9 இடங்களில் மணல் குவாரி அமைக்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர்.

இதற்கிடையில், முதல் கட்டமாக அறந்தாங்கி அருகே பெருநாவலூரில் டிச.15-ம் தேதிக்குள் மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட வேண்டிய தடையின்மை சாற்று பெற்று குவாரி திறக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஒருவேளை அளித்த வாக்குறுதிப்படி குவாரி அமைக்காவிட்டால் மாவட்டம் முழுவதிலும் ஆங்காங்கே மாட்டுவண்டிகளோடு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x