

மாநில அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக ஆளுநர் கடைப்பிடிக்காதது ஏன் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 28) வெளியிட்ட அறிக்கை:
"நீட் தேர்வினால், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குக் கிடைக்கும் இடம் ஒரு சதவீதம்கூட இல்லை என்ற கொடுமையான நிலையை சுட்டிக்காட்டி நாமும், பலரும் தொடர்ந்து எழுதி வருகிறோம். இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தரும் வகையில் ஏற்பாடு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது.
அந்தக் குழு, ஆராய்ந்து 10 சதவீத இட ஒதுக்கீடு தரலாம் என்று பரிந்துரை செய்துள்ளதை அமைச்சரவை ஏற்ற நிலையில், அதையும் அப்படியே செயல்படுத்தத் தயங்கி, வெறும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யும் ஒரு தனிச் சட்டம் கொண்டுவர, கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவாகக் கொண்டு வந்து நிறைவேற்றியது.
அந்த மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் பெற, முறைப்படி அனுப்பி ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இதற்கு ஒப்புதல் தராமல், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, கலந்தாய்வு தொடங்கவேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது. இந்நிலையில், முதல்வரும், அமைச்சர்களும், பிறகு 5 அமைச்சர்களும் தனியே சந்தித்தும்கூட, வற்புறுத்தியும்கூட அம்மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் உள்ளார்!
கண்டனத்திற்குரிய ஒன்று!
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், 'ஒப்புதல் அளிக்க மேலும் சில வாரங்கள் ஆகும். இதை அமைச்சர்களிடம் தெளிவுபடுத்தி ஏற்கெனவே கூறியுள்ளேன்' என்று பதில் எழுதியுள்ளார். இதன்மூலம் தான், அமைச்சர்கள், தேவையின்றி அதனை மறைத்து, 'விரைவில் ஒப்புதல் தருவார், தருவார்' என்று, முன்பு நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிய செய்தியை மறைத்துவிட்டு, பிறகு உயர் நீதிமன்றம் மூலமே அது வெளிப்பட்ட நிலைபோல, இதிலும் ஏற்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்!
எதிலும் இரட்டை வேடம்! இரட்டைக் குரல்!!
எதிலும் இரட்டை வேடம்! இரட்டைக் குரல்!! இந்நிலைதானா எதற்கும் என்று எதிர்க்கட்சியினர் உள்பட பலரும் கேள்வி எழுப்பும் நிலையை, ஆளுங்கட்சியினர் தங்களது செயலின் மூலம் உருவாக்கிக் கொண்டனர்!
உறுதியான நிலைப்பாடு என்பது இருந்தால், இப்படி ஒரு நிலை ஏற்படுமா? இது ஒருபுறம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவின்படி, ஒரு மாநில ஆளுநர் அந்த மாநில அரசு மசோதாக்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி விட்ட பிறகு, அது நிதி பற்றிய மசோதாவாக இல்லையென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 200 தெளிவாக விளக்குகிறது.
எந்த சட்டத் தடையும் இல்லை!
நான்கு வழிமுறைகள் ஆளுநருக்கு உண்டு.
1. ஒப்புதல் அளிப்பது
2. ஒப்புதலை மறுப்பது - நிறுத்துவது
3. குடியரசுத் தலைவர் ஆய்வுக்கு அனுப்புதல்
4. அம்மசோதாவை தனது கருத்துரையுடன் மறுபரிசீலனை செய்ய திருப்பி அனுப்புவது
இதில் ஆழமாகப் பரிசீலித்து முடிவெடுக்க இத்தனை மாதங்கள் எடுத்துக்கொள்ள எந்தச் சட்டத் தேவையும் இல்லை.
ஆளுநருக்குப் போதிய சட்ட வெளிச்சத்தைத் தரக்கூடிய ஒன்று!
ஏற்கெனவே உள் ஒதுக்கீடு சமூக நீதியில் கொடுப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு. உச்ச நீதிமன்ற அரசியலமைப்புச் சட்ட அமர்வின் 5 நீதிபதிகளின் தீர்ப்புகள் வந்துள்ளன. தமிழக அரசு செய்த உள் ஒதுக்கீடு செல்லும் என்றும் தீர்ப்பு வெளிவந்துள்ளது ஆளுநருக்குப் போதிய சட்ட வெளிச்சத்தைத் தரக்கூடிய ஒன்று!
பின் எதற்காக தயக்கம்?
ஏழை, எளியவர்களின் கல்வி வாழ்வு இப்படியா பந்தாடப்படுவது?
நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் மனநிலை கொதி நிலையில், மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகிய நிலை ஒருபுறம்; சென்னை உயர் நீதிமன்ற நீதிபகளே, கண்ணீர் விட்டு இந்த ஏழை, எளியவர்களின் கல்வி வாழ்வு இப்படியா பந்தாடப்படுவது என்ற வேதனை நிறைந்த கேள்வி.
அதற்குப் பிறகும் ஆளுநர் அசையவில்லை, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்தும், தொடரும் அவலம்!
மத்திய அரசின் நிலைப்பாடுதான் இதற்கு மூல காரணம் என்பதை யாராலும் ஊகிக்க முடியும், அதன் சமூக நீதிக்கு விரோதமான போக்கு உச்ச நீதிமன்ற வழக்கில் அப்பட்டமாக வெளியாகிவிட்டது!
அரசியலமைப்புச் சட்டம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக மக்களாட்சி அரசின் மசோதா இப்படி ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கிடந்து, இப்படியா மாணவர் - பெற்றோருக்கு ரத்தக் கொதிப்பை ஏற்படுத்துவது?
மக்கள் மன்றம் மறந்துவிடும் என்ற நினைப்பு வேண்டாம்!
இந்தக் கொடுமைக்கும், இரட்டை வேடம் போடுவோரையும் அதற்குக் காரணமானவர்களையும் மக்கள் மன்றம் மறந்துவிடும் என்ற நினைப்பு ஒருபோதும் வேண்டாம்!
அரசியலமைப்புச் சட்ட உரிமை, மாநில உரிமை எல்லாம் காற்றில் பறக்கிறது தமிழ்நாட்டில், குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் கொடுமை எவ்வளவு காலம் நீடிப்பது?
ஓர் அணியில் நின்று போராட ஆயத்தமாவீர்!
மக்கள் மன்றம்தான் இதற்கு தீர்ப்பளிக்க வேண்டிய கட்டம் நெருங்குகிறது! ஒத்த கருத்துள்ளோரே, ஒதுங்கி நிற்காதீர், ஓர் அணியில் நின்று போராட ஆயத்தமாவீர்!".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.