

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏயின் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
நாகர்கோவிலைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அத்தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவரது ஜாமீன் மனு ஏற்கெனவே 2 முறை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் 3-வது முறையாக ஜாமீன் கேட்டு நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், பாலியல் சம்பவம் 2017-ல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது எந்தப்புகாரும் அளிக்கவில்லை. உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கவும், தலைமறைவாகவும் வாய்ப்புள்ளது என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் கடந்துள்ளது. இதுவரை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கலாம் என்றார்.
இதையடுத்து, மனுதாருக்கு ஜாமீன் வழங்க முடியாது. மனுதாரர் கீழமை நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ளலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.