

வங்கி அதிகாரிகள் நியமனத்தில் சமூக அநீதி முறியடிக்கப்பட்டது பாமகவுக்குக் கிடைத்த வெற்றி என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 28) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கி அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த ஆள் தேர்வு அறிவிக்கையில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 116 இடங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து பாமக சார்பில் வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடங்கள் மீண்டும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது.
பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மராட்டியம், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி ஆகிய நான்கு வங்கிகளுக்கு 1,417 அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆள் தேர்வு அறிவிக்கையை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி வெளியிட்டது. மொத்தம் உள்ள 1,417 இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 382, பட்டியல் இனத்தவருக்கு 212, பழங்குடியினருக்கு 107, உயர்வகுப்பு ஏழைகளுக்கு 141 என இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 842 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், உயர் வகுப்பு ஏழைகளுக்கு மட்டும் சரியான அளவில் இடங்களை ஒதுக்கிய வங்கிகள், மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 701 இடங்கள் ஒதுக்குவதற்குப் பதிலாக 585 இடங்களை மட்டுமே ஒதுக்கின. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 116 இடங்கள் குறைக்கப்பட்டிருந்தன.
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்ட ஆள் தேர்வு அறிவிக்கையை ஆய்வு செய்து பார்த்தபோது முதல் மூன்று வங்கிகள் இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்திருப்பதும், யூகோ வங்கி மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதில் குளறுபடி செய்திருப்பதும் தெரியவந்தது.
யூகோ வங்கியில் நிரப்பப்பட உள்ள 350 அதிகாரிகள் பணி இடங்களில் 208 இடங்கள் இட ஒதுக்கீடு பிரிவினருக்கும், 142 இடங்கள் பொதுப்போட்டி பிரிவினருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 208 இடங்களுக்குப் பதிலாக 94 இடங்களை மட்டுமே ஒதுக்கிய யூகோ வங்கி நிர்வாகம், மீதமுள்ள 114 இடங்களைப் பொதுப்போட்டி பிரிவில் சேர்த்து அப்பிரிவுக்கு மொத்தம் 256 இடங்களை ஒதுக்கியது. அதாவது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு மொத்தம் 49.50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்குப் பதிலாக, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 4 விழுக்காடு, பட்டியலினத்தவருக்கு 10 விழுக்காடு, பழங்குடியினருக்கு 3 விழுக்காடு என 17 விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கியது.
இந்த சமூக அநீதியைக் கண்டித்து கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அதுமட்டுமின்றி பாமக சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் வினோபா பூபதி பெயரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வங்கி அதிகாரிகள் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அநீதி இழைத்தது ஏன்? என்று யூகோ வங்கி, வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றுக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கை அனுப்பியது.
அதைத் தொடர்ந்து, தமது தவறை உணர்ந்துகொண்ட யூகோ வங்கி இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, வங்கி அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை இந்திய வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் மூலம் இப்போது வெளியிட்டிருக்கிறது. இது பாமகவின் அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி ஆகும்.
பாமக மேற்கொண்ட இந்த நடவடிக்கை மூலம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 82 இடங்கள் உட்பட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மொத்தம் 114 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. அதாவது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவினரிடம் இருந்து பறிக்கப்பட்ட 32.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாமக மீட்டுக் கொடுத்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பாமகவின் செய்தித் தொடர்பாளர் வினோபா பூபதிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், இதுகுறித்த உண்மைகள், அடிப்படை தரவுகள் ஆகிய எதையுமே அறிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளாமல் கடந்த 14-ம் தேதி நாளிதழ் ஒன்றில் வெளியான தவறான புரிதல் கொண்ட செய்திகளின் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கருத்துத் தெரிவித்திருந்தன.
பிற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினரின் இட ஒதுக்கீடு 32.5 விழுக்காடு பறிக்கப்பட்டிருந்த நிலையில், 10 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டும்தான் பறிக்கப்பட்டிருந்ததாக நாளிதழில் வெளியான தவறான செய்தியின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் கருத்துத் தெரிவித்திருந்தன. அந்தக் கட்சிகளின் சமூக நீதி குறித்த புரிதல் அவ்வளவுதான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக துல்லியமான புள்ளிவிவரங்களுடன் போராடும் ஒரே கட்சி பாமக தான்; சட்டப் போராட்டம் நடத்தி, பறிக்கப்பட்ட சமூக நீதியை மீட்டெடுத்துத் தரும் கட்சியும் பாமகதான் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களின் இட ஒதுக்கீடு உரிமைகளையும் வாழ்வாதார உரிமைகளையும் பாதுகாப்பதற்காக பாமகவின் சமூக நீதிப் பயணம் இன்றுபோல் என்றும் தொடரும்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.