Published : 28 Oct 2020 06:50 AM
Last Updated : 28 Oct 2020 06:50 AM

மீன்பிடி தடைகாலத்துக்கான நிவாரணம் தீபாவளிக்கு முன்பு ரூ.5,000 விநியோகம்: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்துக்கான ரூ.5 ஆயிரம் நிவாரணம், தீபாவளிக்கு முன்பு வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயபுரத்தில் மீன் விற்பனை அங்காடியில், மீன் விற்பனையாளர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். அத்துடன் 15 மீனவர்களுக்கு மானிய விலையில் செயற்கைக் கோள் தொலைபேசிகளையும் வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மீனவர்களுக்கு வழங்கப்படும் செயற்கைக் கோள் தொலைபேசியால், உலகில் எங்கு இருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியும். திருவொற்றியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடித் தளம் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மீன்வளத் துறைக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கிஅதிமுக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்காலத்துக்கான ரூ.5 ஆயிரம், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள ஆண் மீனவர்களுக்கு ரூ.4,500, பெண்களுக்கு ரூ.4 ஆயிரம் தீபாவளிக்கு முன்பு வழங்கப்படும்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளனர். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் காவிரியில் நீரை கர்நாடக அரசு திறக்க வலியுறுத்தாத காரணத்தால் வாஜ்பாய் கூட்டணிக்கு அன்று நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றோம். எங்களுக்கு அதிகாரம் முக்கியமல்ல. திமுகவுக்கு அதிகாரம் எப்போதும் முக்கியம். 17 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவுக்கு தீர்வு காணவில்லை, 205 டிஎம்சி காவிரி நீர் விவகாரம், இலங்கை முள்ளிவாய்க்கால் பிரச்சினையில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். ஆட்சி, கட்சி ஆகியவற்றில் தமிழகத்தின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். இறுதியாக போராடி வெற்றி பெறுவோம்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காகவே பாஜகவைச் சேர்ந்த குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நிம்மதியாக அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்துவது அரசின் கடமை. அந்த அடிப்படையில் கடமையை செய்தோம். யாருக்காகவும் நாங்கள் பயப்படவில்லை. அதிமுகவில் பிரச்சினை என சமூக வலைதளத்தில் தகவல் பரப்புகின்றனர். அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x