ஜெகத்ரட்சகன் மீதான நிலமோசடி வழக்கில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் ஆய்வு: சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை

ஜெகத்ரட்சகன் மீதான நிலமோசடி வழக்கில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் ஆய்வு: சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை
Updated on
1 min read

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நிலமோசடி வழக்கு தொடர்பாக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தனர்.

சென்னை குரோம்பேட்டையில் குரோம் லெதர் தொழிற்சாலைக்கு சொந்தமாக இருந்த நிலங்கள், 1982-ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் அரசுடைமையாக்கப்பட்டன. அந்த நிலங்களை நீராதாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில் 1984-ம்ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், 1996-ம் ஆண்டில் குரோம் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த, தற்போதைய திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், 1.55 ஏக்கர் நிலத்தை, நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி, 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

நீராதாரங்களுக்கு பயன்படும் வகையில் ஒதுக்கப்பட்ட நிலத்தை, தனி நபர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டதாக ஜெகத்ரட்சகன் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கைவிசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் குறித்து விசாரிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து இந்த புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேர்ப்பதற்காக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் சில ஆவணங்களை மட்டும் நகல் எடுத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in