Published : 28 Oct 2020 06:32 AM
Last Updated : 28 Oct 2020 06:32 AM

எடநீர் மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீ ஜயராம மஞ்சத்தாயா பொறுப்பேற்பு: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உபதேசம் வழங்கினார்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த எடநீர் மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீ ஜயராம மஞ்சத்தாயா பொறுப்பேற்றுக் கொண்டார்.காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சன்யாஸ ஆஸ்ரம உபதேசம் செய்துவைத்து, ஆசி வழங்கினார்.

கேரளாவில் உள்ள எடநீர் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர்கேசவானந்த பாரதி சுவாமிகள். இவர் காஞ்சிபுரம் சங்கர மடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். காஞ்சி மடத்துக்கும் பலமுறை வந்துள்ளார். இவர் அத்வைதசித்தாந்தம், சாஸ்திரங்களை போதித்ததோடு பக்தி நெறிகளையும் பரப்பி வந்தார். தான் மடாதிபதியாக இருக்கும்போதே, தன் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ ஜயராம மஞ்சத்தாயா என்பவரை தனது வாரிசாக நியமிக்க விரும்பினார்.

இந்தச் சூழ்நிலையில், கடந்தசெப். 6-ம் தேதி தனது பக்தர்கள்மற்றும் ஸ்ரீஜயராம மஞ்சத்தாயாவை அழைத்த அவர், தான் மறைந்துவிட்டால் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அணுகிஅவரது ஆசியையும், வழிகாட்டுதலையும் பெற்று ஸ்ரீஜயராம மஞ்சத்தாயாவுக்கு சன்யாஸ ஆஸ்ரம உபதேசம் செய்துவைத்து எடநீர் மடத்தின் வாரிசாக நியமிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். அன்றைய தினமே அவர் சித்தி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ஜயராம மஞ்சத்தாயா மற்றும் எடநீர் மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கடந்த அக்டோபர் 2-ம் தேதி சங்கர மடம் வந்தனர். ஸ்ரீமஹா பெரியவர், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்தை தரிசனம் செய்தனர். பின்னர் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்று, கேசவானந்த பாரதி சுவாமிகளின் விருப்பம் குறித்து தெரிவித்தனர்.

பின்னர், அவர் வழிகாட்டியபடி முக்கிய புண்ணியத் தலங்களுக்கு ஸ்ரீஜயராம மஞ்சத்தாயா தீர்த்த யாத்திரை மேற்கொண்டு திரும்பினார். கடந்த அக்டோபர் 19-ம் தேதி அவர் மடாதிபதியாக பொறுப்பேற்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஓரிக்கையில் உள்ள ஸ்ரீமஹா பெரியவர் மணிமண்டபத்தில் மடாதிபதியாக அவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சிகடந்த 26-ம் தேதி நடைபெற்றது. இதில் ஸ்ரீஜயராம மஞ்சத்தாயாவுக்கு ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சன்யாஸ ஆஸ்ரம உபதேசம் செய்துவைத்து, ஆசி வழங்கினார். எடநீர் மடத்தின் சம்பிரதாயப்படி மடாதிபதியாக பொறுப்பேற்ற இவர், இனி ‘ஸச்சிதானந்த பாரதி’என்று அழைக்கப்படுவார் என்றுமடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x