

அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை 3 வாரங்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (27.10.2020) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டம், பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம், நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வங்கி கடன் இணைப்பு, அம்மா இருசக்கர வாகனத் திட்டம் போன்ற திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும்.
சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் தற்பொழுது நாளொன்றுக்கு 700 MLD குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் நீர் இருப்பினை தொடர்ந்து கண்காணித்திடவும், கடல்நீரினை குடிநீராக்கும் திட்டம், கிணற்று தளங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து சென்னைக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் தேவையான அளவு குடிநீர் வழங்க நீர் இருப்பில் உள்ளது.
சென்னை நீங்கலாக பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நாளொன்றுக்கு 1895 MLD குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளை விரைந்து சமர்பிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 60 MLD திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், செங்கல்பட்டு நகராட்சி மற்றும் கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இத்திட்டப்பணிகளை செயலாக்கத்திற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை கொண்டு வர உத்தரவிட்டார்.
மத்திய ஜல் சக்தி துறையின் சார்பில் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.1,463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகளை துவக்க விரைந்து ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார். மத்திய ஜல் சக்தி துறையின் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, காந்தியின் 151வது பிறந்தநாளான அக்டோபர் 2ம் நாள் முதல் 100 நாள் பிரச்சாரம் (100 Days Campaign) என்ற திட்டத்தை துவக்கி அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட வேண்டுமென அறிவித்திருந்தார். தமிழகத்தில் உள்ள சுமார் 37 ஆயிரம் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 54,439 அங்கன்வாடிகளில் ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, ஜல் சக்தி மிஷன் திட்ட நோக்கத்தின்படி அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை 100 சதவீதம் உறுதி செய்து அடுத்த 3 வாரங்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் தலைமையிடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே நாளொன்றுக்கு அதிகளவு கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நாள்தோறும் 14,000 முதல் 15,000 வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் தொற்றுள்ள நபர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் மார்ச் 17 முதல் தற்போது வரை 1,96,378 நபர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 1,83,923 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 8,856 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை 17,58,711 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 8,92,748. இவை ஒரு மில்லியனுக்கான சோதனையில் 2,14,040 ஆகும்.
கரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் தொற்று பாதித்த நபர்களை உடனடியாக கண்டறிய 26.10.2020 வரை 64,282 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 32.14 இலட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.
அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) ஆகியவற்றை பின்பற்றாத தனிநபர்களிடமிருந்து அபராதம், நிறுவனங்களின்மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது 01.04.2020 முதல் 24.10.2020 வரை ரூ2.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது . தற்போது வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் கவன குறைவாக இருக்க கூடாது. அலுவலர்கள் பொது மக்கள் அதிகம் கூடும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் வணிக நிறுவனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.