

கோவை பேரூர் பெரியகுளத்துக்குள் நடைபெற்றுவரும் கான்கிரீட் கலவை தயாரிக்கும் பணியால் ஏற்படும் சூழல் பாதிப்பு குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டுக் கேட்டறிந்தார்.
கோவை பேரூர் பெரியகுளத்துக்குள் நீர் தேங்கும் பரப்பில் கான்கிரீட் கலவை இயந்திரங்களை நிறுவி கலவை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், குளத்துக்குள் கான்கிரீட் படிவதாலும், நீர் தேங்கும் பரப்பு குறைந்துள்ளதாலும் அரசின் இந்த நடவடிக்கைக்கு சூழலியல் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கான்கிரீட் கலவை தயாரிப்புப் பணி நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார். அப்போது, பொள்ளாச்சி திமுக எம்.பி. கு.சண்முகசுந்தரம், திட்டத்தால் உருவாகும் சூழலியல் பாதிப்பு குறித்து உதயநிதியிடம் எடுத்துக் கூறினார்.
பின்னர், இது தொடர்பாகச் சண்முகசுந்தரம் கூறியதாவது:
''எந்த ஒரு ஆய்வும், போதிய திட்டமிடலும் இல்லாமல் ரூ.230 கோடி செலவில் நொய்யல் சீரமைப்பு என்ற பெயரில் உயிர்ச் சூழலைச் சிதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருர் பெரியகுளத்தில் நீர் தேங்கும் பரப்பளவின் ஒரு பகுதியில், குடிசையில் இருந்த மக்களை, நீர்நிலைகளைக் காக்கிறோம் என்ற பெயரில் வெளியே அனுப்பிவிட்டனர்.
அங்கு கான்கிரீட் கலவைகளை உருவாக்கும் இயந்திரங்கள் மற்றும் கட்டுமானத்திற்குத் தேவையான சேமிப்புக் கிடங்கு அமைத்து, சிமெண்ட் பாலை நிலத்தில் ஊற்றி, நிலத்திற்குள் நீர் செல்லாமல் தடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளக் கரைகளை மேம்படுத்தும்போது, குளங்களின் அளவை குறைக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பேரூர் பெரியகுளத்தில், நீர் தேங்கும் பரப்பளவைக் குறைக்கும் விதமாகக் கான்கிரீட் கலவைகளைக் கொண்டு சுவர் எழுப்பி, தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
நீர் தேங்கும் பரப்பளவைச் சுருக்கியதோடு பேரூர் சொட்டையாண்டி குட்டைக்கும், பெரியகுளத்திற்கும் இடையே உள்ள தாய் வாய்க்காலைக் குளறுபடி செய்து அதனுடைய அமைப்பையே சிதைத்து வருகின்றனர்''.
இவ்வாறு சண்முகசுந்தரம் கூறினார்.