

தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் பெற் றோரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை மண்டல அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரது தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் நாமக்கல் மாவட்டத்தில் முகாமிட்டு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் விஷ்ணுபிரியாவின் சொந்த ஊரான கடலூர் அருகே கோண் டூரில் உள்ள அவரது வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை மண்டல துணை இயக்குநர் ராமசாமி தலைமையில் 3 அதிகாரிகள் விஷ்ணுபிரியாவின் வீட்டுக்கு வந்தனர். அவரது தந்தை ரவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். சிறப்பு வட்டாட்சியர் அசோக்ராஜ், டிஎஸ்பி ராமமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரும் வந்திருந்தனர்.
2 டிஎஸ்பி-க்களிடம் விசாரணை
இதனிடையே விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக மேலும் இரு டிஎஸ்பி-க்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விஷ்ணுபிரியா தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்ட நிலையில், தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலும், அவரது நெருங்கிய நண்பர்களிடமும் சிபிசிஐடி போலீஸார் முதல்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் வழக்கறிஞர் மாளவியா, டிஎஸ்பி-க் கள் மகேஸ்வரி, கீதாஞ்சலி உள்பட பலரிடம் சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து டிஎஸ்பி-க்கள் ஜெரீனாபேகம் (சங்ககிரி), இனிகோ திவ்யன் (ஜெயங்கொண்டம்) ஆகியோரி டம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
விஷ்ணுபிரியா திருச்செங் கோடு டிஎஸ்பியாக பொறுப்பேற்ற போது, சங்ககிரி டிஎஸ்பியாக ஜெரீனாபேகமும் பொறுப்பேற்று இருந்தார். இவர்கள் இருவரும் வழக்குகள் சம்பந்தமாக அடிக்கடி பேசி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெயங் கொண்டம் டிஎஸ்பி இனிகோ திவ்யன், நாமக்கல் மாவட்டத்தில் பயிற்சி டிஎஸ்பியாக இருந்தபோது அவருடன் விஷ்ணுபிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் பேசி வந்துள்ளனர். இதன் அடிப்படையில் இவர்களிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.