Last Updated : 27 Oct, 2020 06:24 PM

 

Published : 27 Oct 2020 06:24 PM
Last Updated : 27 Oct 2020 06:24 PM

குமரி மருத்துவர் தற்கொலை சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை

நாகர்கோவில் அருகே டி.எஸ்.பி.யின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிவைத்துவிட்டு மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையை அடுத்துள்ள இலந்தவிளையைச் சேர்ந்தவர் சிவராமபெருமாள். திமுக மருத்துவரணியின் குமரி மாவட்ட துணை அமைப்பாளராக இருந்த இவர் பறக்கையில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வந்தார்.

இவரது மனைவி சீதா அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக உள்ளார். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் உள்ள ஓய்வறையில் சிவராமபெருமாள் விஷம் அருந்தி வாயில் நுரைதள்ளிய நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரது உடலை சுசீந்திரம் போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு சிவராம பெருமாள் எழுதிய இரு பக்கம் கொண்ட கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். அதுமட்டுமின்றி அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலா பரவியது. அதில் கன்னியாகுமரி டி.எஸ்.பி., பாஸ்கரன் மற்றும் இலந்தவிளையை சேர்ந்த மற்றொருவரின் பெயரையும் குறிப்பிட்டு, தனது மரணத்திற்கு அவர்கள் காரணம் என தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து மிரட்டல் விடுத்தது, தன்னை தரக்குறைவாக திட்டியதால் தறகொலை செய்து கொண்டதாகவும், துர்கா சாட்சி என தனது மகளின் பெயரையும் கடிதத்தில் கூறியிருந்தார்.

மருத்துவர்கள், மற்றும் போலீஸார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் உண்மை நிலை குறித்து விசாரணை மேற்கொள்ள எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் அவர் கடிதத்தில் குறிப்பிட்ட கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், உறவினர் விஜய ஆனந்த் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கரோனா ஊரடங்கு காலத்தில் இரவில் காரில் குடும்பத்துடன் சிவராமபெருமாள் சென்றபோது போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதும், அந்நேரத்தில் அவர் கண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இது தவிர தொடர்ச்சியாக அவர் மிரட்டப்பட்டாரா? அல்லது குடும்பப் பிரச்சினை ஏதும் உள்ளதா? எனவும் சிவராம பெருமாளின் மனைவி சீதா, மற்றும் குழந்தைகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, சிவராம பெருமாள் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு முடித்துள்ளதும், இந்தியாவில் மருத்துவப் பணி மேற்கொள்வதற்கு மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்திற்கான தேர்வை முடிக்கவில்லை எனவும் உறவினர்களே சிலர் புகார் கூறியிருப்பதும் தெரியவந்தது.

இப்பிரச்சினை தொடர்பாகவும் போலீஸார் சிவராம பெருமாளிடம் விசாரணை நடத்தியபோது கடும் மன உளைச்சலில் இருந்ததும், குடும்பப் பிரச்சினையும் ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மருத்துவர் சிவராம பெருமாளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x