பிளீச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை அனைத்திலும் ஊழல்: ஆட்சி மாறியவுடன் அனைவரும் சிறை செல்வார்கள்; ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர். | படம்: ஜெ.மனோகரன்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர். | படம்: ஜெ.மனோகரன்.
Updated on
1 min read

பிளீச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை அனைத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது. ஆட்சி மாறியவுடன் ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறை செல்வார்கள் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோரைக் கேலியாகச் சித்தரித்து கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த போஸ்டர்களைக் கிழித்த திமுகவினர் 12 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (அக். 27) மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், போலீஸார் திடீரென அனுமதி மறுத்து இன்று காலையில் மேடையை அகற்ற முயன்றனர். அப்போது திமுகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

சிங்காநல்லூர் எம்எல்ஏ கார்த்திக் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் மேடையை விட்டு இறங்க மறுத்து காவல்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் அனுமதி அளித்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடைக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். ஆர்ப்பாட்டத்தின்போது காவல் துறையினருக்கு எதிராகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் கூட்டத்தினரிடையே உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இது வெறும் போஸ்டர் ஒட்டியதற்கான போராட்டம் கிடையாது. கோவையில் அமைச்சர் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது. தேர்தலில் மக்கள் அவரைத் துரத்தி அடிக்கப் போகின்றனர். அடுத்தமுறை போஸ்டர் ஒட்டினால் கிழிக்க மாட்டோம். அதன் மீதே வேறு போஸ்டர் ஒட்டுவோம்.

குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தத் திட்டமிட்டபோது அதற்கு அனுமதி மறுத்து, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல் அனுமதி கொடுத்தனர். ஆனால், காலையில் அனுமதி மறுத்தனர். இருப்பினும், கைதுக்குத் தயாராகவே மேடைக்கு வந்தேன்.

'கரோனாவை வென்றெடுத்த நாயகனே' என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து போஸ்டர் ஒட்டியதற்குப் பின்னரே, கோவையில் தொற்று அதிகரித்துள்ளது. பிளீச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை அனைத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் இருக்கின்றன.

ஆட்சி மாறியவுடன் ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறை செல்வார்கள். கோவையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை எனில் அடுத்த முறை குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பாக போராட்டம் நடைபெறும்" எனப் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in