

கொடைக்கானல் வட்டக்கானல் அருகே சுற்றுலாபயணிகள் வந்த கார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த லாரன்ஸ் (51), தண்டபாணி (51), அழகன் (28), விஜயகுமார் (30) ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
காரை புதுச்சேரியைச் சேர்ந்த சுஜி ஓட்டிச்சென்றுள்ளார். இந்நிலையில், இன்று பகலில் வட்டக்கானல் பகுதியில் வளைவில் கார் திரும்புகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
பெரியமரம் இருந்ததால் கார் மேலும் பள்ளத்திற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது. இதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த கொடைக்கானல் போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். ஐந்து பேரும் படுகாயங்களுடன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.