

‘‘திமுகவில் உள்ள இந்துகளும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு தக்க தருணத்தில் பாடம் புகட்டுவர்,’’ என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தாய்மார்களை யார் கொச்சைப்படுத்தினார்களோ, சட்டம் ஒழுங்கை கெடுக்கிறார்களோ அவர்களை தானே தமிழக அரசு கைது செய்ய வேண்டும்.
ஆனால் அமைதியான முறையில் போராடச் சென்ற எங்கள் நிர்வாகிகளை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு கண்டித்து பாஜக போராடும்.
திமுக தலைவர் ஸ்டாலின் பெண்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்களைப் பாதுகாக்கிறார். திமுகவில் ஒரு கோடி இந்துக்கள் உள்ளதாக கூறுகின்றனர். அந்த இந்துக்களும், தமிழக தாய்மார்களும் தக்க தருனத்தில் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்று கூறினார்.
அண்மையில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மனுநூல் பெண்களை இழிவு செய்வதாகப் பேசியிருந்தார். இதனால், திருமாவளவனைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் கருத்து தெரிவித்த திமுகவையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கையில் பேசிய எல்.முருகன், திமுகவில் உள்ள இந்துக்களும், தமிழக தாய்மார்களும் தக்க தருனத்தில் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவார்கள் எனக் கூறியிருக்கிறார்.