

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்று கைதாகி, விடுவிக்கப்பட்டபோதும் காவலர் சமுதாய நலக்கூடத்திலிருந்து செல்ல மறுத்து ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்குக் கடந்த டிசம்பர் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள சம்பளம், ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வலியுறுத்தி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கல்வித் துறை வளாகத்தில் 20 நாட்களாகத் தர்ணா போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்காக ஆம்பூர் சாலையில் ஜென்மராக்கினி கோவில் அருகே ஒன்றுகூடினர். அங்கு அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கு தரையில் அமர்ந்து ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆசிரியர்கள் ஆளுநர் மாளிகையை நோக்கித் தடையை மீறிச் செல்ல முயன்றதால் போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் கோரிமேடு காவலர் சமுதாய நலக்கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். ஆனால் ஆசிரியர்கள் சமுதாய நலக்கூடத்திலிருந்து விடுதலையாகிச் செல்ல மறுத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் ஆசிரியர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் ஊதியம், ஓய்வூதியப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.