Published : 27 Oct 2020 03:54 PM
Last Updated : 27 Oct 2020 03:54 PM

ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு; அக்.28-ல் விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை

முன்னேறிய சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைப் புதிதாக ஒன்பதே நாட்களில் இயற்றிய பாஜக அரசு ஏற்கனவே சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த 6 ஆண்டுகளாகத் தாமதிப்பது ஏன்? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்தியில் ஆளும் பாஜக அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக் 28 புதன் காலை 11 மணியளவில் தமிழகமெங்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் சமூக நீதியை வலியுறுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழக அரசும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தாக்கல் செய்த வழக்கில் அக் 26 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீடு ம ட்டுமல்ல 27 சதவீத இட ஒதுக்கீடும் கூட வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்துவிட்டது.

அதற்குக் காரணம் இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரமே ஆகும். இது தொடர்பான கொள்கை முடிவை எடுக்கும் வரை நாங்கள் 50% இட ஒதுக்கீடு மட்டுமல்ல 27% இட ஒதுக்கீட்டையும் கூட கொடுக்க முடியாது என்று மத்திய அரசு அதில் தெரிவித்திருந்தது.

அதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதனால் இப்போது மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு இந்த ஆண்டு மட்டுமல்ல மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.

ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 27 அன்று இதில் தெளிவாகத் தீர்ப்பை வழங்கியது. 50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சொன்னதோடு இதற்காக மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், இதுவரை அந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு எடுக்கவில்லை.

பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுப்பதற்கு ஆண்டுக்கணக்கில் தாமதம் செய்யும் பாஜக அரசு முன்னேறிய சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுத்து அதை ஒரே வாரத்தில் சட்டமாக்கியுள்ளது. முன்னேறிய சாதிகளுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுப்பதற்கான வரைவு 2019 ஜனவரி 6 ஆம் தேதி சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு அன்றே ஒப்புதல் பெறப்பட்டது.

அடுத்த நாள் ஜனவரி 7 அன்று அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதற்கு மறுநாள் ஜனவரி 8 ஆம் தேதி மக்களவையில் அந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு அன்றே நிறைவேற்றப்பட்டது. மறுநாள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 14 ஆம் தேதி அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிவிட்டார்.

இந்த நடவடிக்கைகள் யாவும் ஒன்பதே நாட்களில் நிறைவுசெய்யப்பட்டன. ஆனால், மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் கடந்த 6 ஆண்டுகளாக பாஜக அரசு இழுத்தடித்து வருகிறது. இதிலிருந்தே ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் பாஜக அரசுக்கு விருப்பமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

முன்னேறிய சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைப் புதிதாக ஒன்பதே நாட்களில் இயற்றிய பாஜக அரசு ஏற்கெனவே சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த 6 ஆண்டுகளாகத் தாமதிப்பது ஏன்?

இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் கடந்த பல ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கான ஓபிசி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பைப் பறிகொடுத்துள்ளனர். தாமதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே இனியும் இழுத்தடிக்காமல் மத்திய அரசு தனது முடிவை உடனே அறிவிக்கவேண்டும்.

மத்திய ஒதுக்கீட்டு இடங்களில் இந்த ஆண்டே 50% இட ஒதுக்கீடு கிடைக்க வழிசெய்யவேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதியில் அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்''.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x