

மனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை முதலில் அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், "மனுநூலை பாஜகவினர் ஏற்றுக் கொள்கின்றனரா இல்லையா என்பதை அவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். மனுநூல் இந்திய அரசியல் சாசனத்தைவிடவும் உயர்ந்ததா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
நான் மனுநூலை நேரடியாகப் படித்ததில்லை. கட்டுரைகள், ஒரு சில முக்கிய நூல்கள் மூலமாக அறிந்திருக்கிறேன். எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது.
ஆனால் பாஜகவினருக்கு சம்ஸ்கிருதம் தெரியும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதால் முதலில் அவர்கள்தான் இந்த நூலைப் பற்றி விளக்க வேண்டும். மனுநூல் என்ன கூறுகிறது என்பதை அவர்களே மற்றவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.
ஒரு கட்சி மூன்றாம் அணி அமைப்பது அந்தக் கட்சியின் சொந்த விருப்பம். அதில் நாம் தலையிடக் கூடாது.
தமிழக ஆளுநர் விசித்திரமானவர். எதிலெல்லாம் ஓர் ஆளுநர் தலையிடக் கூடாதோ அதிலெல்லாம் அவர் தலையிடுகிறார். எதற்கெல்லாம் ஒப்புதல் வழங்க வேண்டுமோ அதற்கெல்லாம் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார். இது வேதனை அளிக்கிறது
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோல வருகிற சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்" என்றார்.
அண்மையில், நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் மனுநூல் பெண்களை இழிவுபடுத்துவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியிருந்தார். இதனையடுத்து, திருமாவளவனைக் கண்டித்து பாஜகவினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜகவினரை எதிர்த்து விசிகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.