Last Updated : 27 Oct, 2020 03:18 PM

 

Published : 27 Oct 2020 03:18 PM
Last Updated : 27 Oct 2020 03:18 PM

தேர்தலுக்குத் தயாராகும் புதுச்சேரி கட்சிகள்; நிர்வாகிகளைச் சந்திக்க 2 நாள் முகாமிடும் காங். மேலிடப் பார்வையாளர்

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் புதுச்சேரியில் கட்சிகள் தயாராகத் தொடங்கியுள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் புதுச்சேரியில் இரண்டு நாள் முகாமிட்டு கட்சி விழாக்கள், செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

புதுச்சேரியில் வரும் 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கட்சிகள் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல்களில் தோல்வியால் 'சென்டிமென்ட்'டாக புது இடத்துக்கு மாறுகிறது. தனது அலுவலகத்தைக் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு மாற்ற உள்ளது. அதற்கான கட்டிடம் அமைக்க பூமி பூஜையை நடத்தியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜகவும் பலரைக் கட்சியில் இணைத்து தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்துகிறது. அண்மையில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி புதுச்சேரிக்கு வந்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார். அதேபோல், அதிமுகவில் மாநிலச் செயலாளர் உட்பட முக்கியப் பொறுப்புகள் காலியாக உள்ளதால் அவை விரைவில் நிரப்ப வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுக, தற்போது கடுமையாக ஆளுங்கட்சியை விமர்சித்து வருகிறது. இச்சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்துக்குப் புதுச்சேரி திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், காரைக்கால் மாவட்டச் செயலாளர் எ.எம்.ஹெச் நாஜிம் ஆகியோர் இன்று (அக். 27) சென்றுள்ளனர். தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை செய்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியும் தேர்தலைச் சந்திக்கும் விதமாக அரசு திட்டப்பணிகளை முடித்து பல திறப்பு விழாக்களை நடத்தத் தொடங்கியுள்ளது.

கட்சி ரீதியில் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன. இதுபற்றி கட்சி வட்டாரங்களில் கூறுகையில், "அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் தினேஷ் குண்டுராவ் புதுவை மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வரும் 30-ம் தேதி புதுவைக்கு வருகிறார். அன்று இரவு புதுவையில் தங்குகிறார். மறுநாள் 31-ம் தேதி காலை 9 மணிக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள், இந்திரா காந்தியின் நினைவு நாள் ஆகியவற்றில் பங்கேற்கிறார்.

நவம்பர் 1-ம் தேதி காங்கிரஸ் அலுவலகத்தில் 10 மணிக்கு நடைபெறும் புதுவை விடுதலை நாள் விழாவில் பங்கேற்றுக் கொடியேற்றுகிறார். தொடர்ந்து, காலை 10.30 மணிக்குத் தனியார் உணவகத்தில் நடைபெறும் புதுவை பிரதேச காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அன்று மதியம் 3 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்படுவார். கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துத் தேர்தல் பற்றி உரையாடுவதே இப்பயண நோக்கம்" என்கின்றனர்.

அத்துடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல்களைச் சந்திக்க கட்சிகள் தயாராகத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x