

திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (அக். 27) வெளியிட்ட அறிக்கை:
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேற்று (அக். 26) ஈரோடு மாவட்டம், எல்லீசுப்பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்துள்ளார்.
இந்தச் செய்தியறிந்த மதவெறிக் கும்பலும், பாஜகவினரும் தொல். திருமாவளவன் எம்.பி.க்கு எதிராக கருப்புக் கொடி காட்டுகிறோம் என்கிற பெயரில் வன்முறையில் ஈடுபட முயன்றுள்ளனர். இந்த வன்முறைக் கும்பலைக் காவல்துறையினர் கைது செய்து, அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தமிழக அரசியலை வன்முறைக் களமாக்கி, தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபடும் பாஜக, இந்துத்துவ சக்திகளின் சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறது.
அரசியல், தத்துவ நிலைக் கருத்துகளை வாதப் பிரதிவாதங்கள் மூலம் எதிர்கொள்வதுதான் தர்க்கவியல் ஜனநாயகமாகும். ஆனால், ஜனநாயக நெறிமுறைகள் மீது நம்பிக்கையில்லாத பாஜகவினர், கும்பல் வன்முறையில் ஈடுபடுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வன்முறையில் ஈடுபடும் கும்பல்களை தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.