Published : 27 Oct 2020 01:02 PM
Last Updated : 27 Oct 2020 01:02 PM

கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1358 கனஅடியாக அதிகரித்தது. வரும் நீர் முழுவதும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுவதால் 3 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 1300 கனஅடியாக இருந்தது-. நேற்று 1358 கனஅடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 49.20 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி, விநாடிக்கு 1358 கனஅடி தண்ணீர் ஆற்றிலும், பாசன கால்வாய்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. சிறிய மதகுகள் வழியாக நுரை பொங்க தண்ணீர் வெளியேறி வருகிறது. ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1120 கனஅடி நீர் திறப்பு

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1230 கனஅடி நீர் வருவதால் அணையில் இருந்து விநாடிக்கு 1120 கனஅடி நீர் திறக் கப்பட்டு வருகிறது.

இதனால் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது நாளாக எச்சரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 400 கனஅடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 1230 கனஅடியாக உயர்ந்துள்ளது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணை யின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. இதில் தற்போது அணையின் நீர் மட்டம் 39.69 அடி. அணையில் இருந்து விநாடிக்கு 1120 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள கெலவரப்பள்ளி, சின்னகொள்ளு, பெத்தகொள்ளு, பூதிநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேலும் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்ல முயற்சிக்கக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராமமக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x