Published : 27 Oct 2020 12:47 PM
Last Updated : 27 Oct 2020 12:47 PM

பொதுமக்களிடம் இருந்து புத்தகங்களை திரட்டி பழங்குடியின கிராமத்தில் நூலகம் அமைப்பு

பழங்குடியின கிராமத்தில் தொடங்கப்படவுள்ள நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து திரட்டும் பணியினை ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த குன்றி, அணில் நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பல்வேறு புத்தகங்களைப் படிக்கும் வகையில், உணர்வுகள் அமைப்பின் சார்பில் நூலகம் அமைக்கப்படவுள்ளது. உணர்வுகள் அமைப்பின் நிறுவன தலைவர் மக்கள்ராஜன் தலைமையிலான நிர்வாகிகள், நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை, வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடமிருந்து பெற்றனர். இந்நிகழ்வினை ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், புத்தகங்களைக் கொடுத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு பெரியார் நகர், சம்பத் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் புத்தகங்கள் திரட்டும் பணி நடந்தது. இந்நிகழ்வில் திட்ட இயக்குநர்கள் மேகலா, பிரபு, புவனேஷ், ஆரிப் அலி, சதீஷ், சுஜித், மேகா, ஸ்மிதா, சர்வேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து மக்கள் ராஜன் கூறும்போது, ‘பழங்குடியின குழந்தைகள் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், அவர்கள் பொது அறிவு வளர்ச்சிக்கும் உதவும் வகையில், நூலகம் அமைக்கவுள்ளோம்.

எங்களது அமைப்பின் சார்பில் குறிப்பிட்ட அளவு புத்தகங்களை வாங்கி நூலகத்திற்கு கொடுக்கவுள்ளோம். இந்த திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, வீடுகள்தோறும் சென்று புத்தகம் திரட்டும் பணியைச் செய்கிறோம்’ என்றார். சத்தியமங்கலத்தை அடுத்த குன்றி, அனில்நத்தம் கிராமத்தில் நூலகம் தொடங்குவதற்காக பொதுமக்களிடம் இருந்து புத்தகங்களைப் பெறும் நிகழ்வினை ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x