Published : 27 Oct 2020 12:44 PM
Last Updated : 27 Oct 2020 12:44 PM

பெரியார் சிலை அவமதிப்பு; வன்முறை வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது: கே.எஸ்.அழகிரி

பெரியாரின் சிலையை அவமதிக்கிற வன்முறை வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 27) வெளியிட்ட அறிக்கை:

"சமீபகாலமாக தமிழகத்தில் பெரியார் சிலையை அவமதிக்கின்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி களங்கப்படுத்தியிருப்பது வகுப்புவாத சக்திகளின் வெறிச் செயலாகவே நிகழ்ந்திருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

அதேபோல, கடந்த மாதம் திருச்சி மாவட்டம், இனாம்புலியூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. அதற்கும் இதுவரை காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. இத்தகைய குற்றங்களைச் செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிற வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

தமிழ்ச் சமுதாய மக்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதியை தம் வாழ்நாள் முழுவதும் போராடி பெற்றுத் தந்தவர் பெரியார். அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரின் கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் பாஜக, ஆர்எஸ்எஸ், உள்ளிட்ட மதவாத சக்திகளால் ஏற்பட்டிருக்கிறது.

காந்தியடிகளின் வழியைப் பின்பற்றினால்தான் இந்து மதத்தைக் காப்பாற்ற முடியும். ஆர்எஸ்எஸ் வழியைப் பின்பற்றினால் இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது. வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தால் மதநல்லிணக்கம் சீர்குலைந்து சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டு சமூக அமைதி கெடுவதற்கான சூழ்நிலையைத் தமிழக பாஜக செய்து வருகிறது. இதை தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு நிச்சயம் முறியடிப்பார்கள் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. தமிழகம் ஒருபோதும் மதவாத சக்திகளின் ஆதிக்கத்தை அனுமதிக்காது.

எனவே, பெரியாரின் சிலையை அவமதிக்கிற வன்முறை வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அதைச் செய்யத் தவறுவார்களேயானால், பெரியாருக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தார்கள் என்கிற பழி அதிமுக மீது சுமத்தப்படும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x