Published : 27 Oct 2020 12:16 PM
Last Updated : 27 Oct 2020 12:16 PM

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் நள்ளிரவில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் 10-ம் நாளான நேற்று நள்ளிரவு மகிஷாசுர சம்ஹாரம் நடைபெற்றது. கரோனா ஊரடங்கால் இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இவ்விழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளினார்.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, நேற்று காலை 9 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், 10 மணிக்கு சூலாயுதத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் கோயில் முன் முத்தாரம்மன் எழுந்தருளினார். கடற்கரைக்கு பதில், கோயில் வாசலிலேயே மகிசாசுர சம்ஹாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர் களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இன்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலை 5 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்பட்டு காப்பு களைதல் நடைபெறும். தசரா திருவிழாவுக்காக வேடம் அணிந்து விரதம் கடைபிடித்த வெளியூர் பக்தர்கள், தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களிலேயே காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x