

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் குழந்தை திருமணங்கள் குறித்த புகார்கள் அதிகரித்தன. அதன்பேரில் குழந்தைகள் நலத் துறையினர் பல திருமணங்களை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதைத் தடுக்கப் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சின்னாள பட்டி அருகே அ.குரும்பபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பொற்செல்வி, ஆசிரியைகள் தங்ககண்மணி, ஜோஸ்பின், சிலி, ஜாக்குலின்லீமா, பத்மா ஆகியோர் ஊராட்சி உறுப்பினர் முத்துலட்சுமியுடன் இணைந்து குரும்பபட்டி, நடுப்பட்டி, திருமைய கவுண்டன் பட்டி, கதிர்பட்டி கிராமங்களில் குழந்தை திருமணத்துக்கு எதிராக வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.
அதில் குழந்தைத் திருமணம் சட்டப்படிக் குற்றம், குழந்தை திருமண ஏற்பாடுகள் நடந்தால் புகார் செய்ய வேண்டிய தொடர்பு எண் ஆகியவை இடம் பெற்றிருந்தன.